Jan 25, 2011

எனக்காக வந்த கதை


                                                                                      
அமுதே நீ
அகிலம் தொட்டு
ஆளான கதை அறியவே ஆவலடி..

நீலவான தொட்டில் கட்டி
நிலாவை கையிலிட்டு
தூங்க வைத்தாரோ..

பல கிரகமுடைத்து
உன் கண்களிலே மையுமிட்டாரோ..

மல்லிகை நீ தூங்க
உலகின் மௌனமெல்லாம்
உன் முகத்தில் ஒட்டிக் கொண்டதோ..

கைகளை மடித்து நீ தூங்க
சில நதிகள் வந்து
உன் ரேகைகளில் பதுங்கி நின்றதோ..

இளையவள் நீ சிணுங்கி எழுந்த
நேரமெல்லாம்
உலகம் விடியல் கண்டதோ..

தாரகை நீ சூடிட
ஒரு பூ தேட
கல்லிச்செடியும் மலராய் மாற
ஆசை கொண்டதோ...

சின்ன பாதங்கள் வீசி
நீ நடக்க என் வைரமே உன் கால்களில்
தங்கம் தான் படைத்தாரோ...

வானவில்லை வளைத்து நீ
வளையல் ஆக்கிட
கோபம் கொண்ட மேகமெல்லாம்
அந்தி ஆனதோ...

தேனமுதே தேவதையே
அழகாய் நீ சிரிக்க விழுந்த குழியில்
பிறைநிலா ஒன்று சேர்ந்து கொண்டதோ...

கனிமொழி நீ பேச
காவியங்கள் கைக்கட்டி புன்னகைததோ..

நிலவொளியே என் நிழலே
தேம்பி நீ அழுக
தென்றலும் அன்னை போல உருவம் கொண்டதோ

வெயிலும் வெறும் தரையும்
படாது வளர்ந்தாய்
உன்னை நனைத்திடவே வந்த மழை
உன்னழகில் நனைந்து மண்ணில் கவிழ்ந்ததோ...

வருடங்கள் கடந்ததின்
ஒரு வரமாய்
முழுமதி நீ பருவம் கொண்டாய்
உன்னை பார்த்துப்பார்த்து
கண்ணாடியும் நாணம் கொண்டதா....

என் கன்னித்தமிழ் கூட
சொல்மறந்து நின்றவண்ணம்
கண் சிமிட்டுமெனில்

எங்கு சென்று மொழி அறிந்து
உன்னை நான் சீராட்ட

கண்மணியே என்னவளே..
கண்ணிரண்டில் கலந்தவளே
என் பேனாவின் நரம்புகளில்
பொங்கி வழியும் காதல் கவிதையே...

நீ எனக்காக வந்த கதை....
என் நெஞ்சில் தலை புதைத்து
கூறாயோ... உன் தேன் மொழியால்...?

Jan 11, 2011

இளமை வரம்..

நிலாவை கையிலெடுக்க
ஆசை கொண்டது
நீயென்ற சிறையில்
நான் அடைபட்ட போது தான்....

நான் நம்பாத கடவுள் கூட
உண்மையென்று தோன்றியது
நான் நினைத்த நொடியில்
நீ கண்ணில் பட்ட போது தான்..

கொட்டும் மழையோடு நான்
நனையத் துடித்தது
ஒற்றைக் குடையோடு
நீ வந்த போது தான்....

எப்போதும் பழகிய மாமர நிழலில்
உட்காரத் தோன்றியது
உன்னோடு நான் கண்ட
சந்திப்பின் போது தான்..

இறப்பு என்பதை
நான் வெல்லத் துடித்தது
மறுப்பேதும் சொல்லாமல்
நீ முத்தமிட்ட போது தான்..

தூக்கம் வெறுத்த என் விழிகள் இரண்டும்
போர்வைக்குள் புதையக் கேட்டது
கனவாய் வந்து நீ
கலகம் செய்த போது தான்....

அம்மாவின் மடியோடு
முடிந்திருந்த என் இளமை
நிமிர்ந்தொரு முகம் பார்த்தது
நீ என்னை எதிர் கொண்ட  போது தான்....

தமிழின் உயிர் மெய்யை
நேசிக்க முடிந்தது
நீயென்ற ஒரு கவிதையை
வாசித்த போது தான்....

பூக்களின் வாசனை
கடல் அலை ஸ்பரிசம்
யாவும் பிடித்தது
நீ வந்து கை கோர்த்த போது தான்...

மொழியால் சொன்னாலும்
புரியாத எனக்கு
மௌனம் பழகியது
நீ கோபப் பட்ட போது தான்...

நிதானம் மறந்த
வாழ்க்கையில்
என்னை நின்று காதலிக்கச் சொல்லியது
நீ ஒருத்தி மட்டும் தான்....

வாழ்வானாலும் சாவானாலும்
உடனிருக்க ஆசை கொண்டது
உன் கை விரலால்
நீ என் தலை கோதிய போது தான்...

அடிக்கடி கேட்பாயே
'என் மீது காதல் வந்தது எப்போதெ'ன்று....
இப்போது புரிகிறதா..

நீ செய்த ஒவ்வொன்றிலும்
உனக்காக நான் தேய்ந்தது?
நான் வாங்கி வந்த
இளமை வரமே...
வரமாகவும் வந்துவிட்டு

தொலைவில் நிற்கிறாய்...

வண்ணமில்லாத ஒரு காட்டில்
படைக்கப்பட்ட ஓவியனாய்
நான் தவித்துக் கிடக்கிறேன்!!!

Jan 8, 2011

மறந்ததோடு விட்டுவிடு..

நினைவுகள் புதைந்த நெஞ்சுக்குள்
ஒரு துகளாய் ஒட்டி இருந்த உன்னை
தட்டி எடுப்பதாய்
ஒரு நாளும் நினைக்கவில்லை..

நீர் நிறைந்த  நிறைகுடமாய்
நீ என் நினைவுக்குள் தளும்பியது ஒரு காலம்...

நீரற்று போன குளமாய்
நான் கிடக்கும் காலம் இது!

மறந்ததாய் எத்தனை முறை சொல்லி கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப் பார்க்கும்
உன் பவுர்ணமி முகம்
என்னை படுத்தும் பாடு எப்படி அறிவாய் நீ?

உன் முகத்தை விட கண்களையே
அதிகம் காட்டினாய்...

ஆயிரம் கண்களுக்கிடையிலும்
உன்னிரு கண்கள் என் உயிர் பிடுங்குமே...
அதுவெல்லாம்
இன்று நினைக்கையில் கொடுமையடி!

உன்னை தாங்கி நகர்ந்த பேருந்தின் ஜன்னல் ஓரம்
நிலா போல நீ மட்டும் ஏனடி
என் கண்களை உறுத்தித் தொலைத்தாய்..?

என்னை தியாகம் செய்ததில்
நீ என்ன அடைந்தாயோ

நான் அனைத்தும் தொலைத்தேன்!

நெடுதூரம் என் கை பிடித்து
நடந்து வந்தாய்

ஒரு கொடும் பாதையின் விளிம்பில்
நிர்கதியாய் விட்டுவிட்டு
எங்கேயடி பறந்தாய்...?

உன்னால் நந்தவனமான
என் பாலை வழி பயணம் ஒன்று....
உன்னாலேயே
கரிசல் மேடாய் போன நிலை...

உன்னிடம் எப்படிச்சொல்ல....

கண்களுக்குள் என்னை கடத்தி...
கனவாக களைந்தவளே.....

உன்னை தொலைத்துவிட்டதாய்
சொல்லிச்சொல்லி காட்டுவது போல்
கண்களில் தென்பட்டு போவாயெனில்

நீயின்றி வாழ நான் சேர்த்து வைத்த
துணிச்சல் எல்லாம் துண்டுத்துண்டாய் உடைகிறது!!!

என் நினைவுப்பெட்டகம் முழுதும் நீயே இருக்கிறாய்
இருந்தும்...
இல்லாத ஒரு நிலை தந்தாய்...

உன் வாசல் உள்ள திசை பார்த்து
நின்றிருக்கும் என் காதலை
மறந்ததோடு விட்டுவிடு...

நீ என்றாவது வருவாய் என்ற
அடிமனத்தின் ஆசையோடு
வாழ்ந்திறப்பதில் துன்பமில்லை....

நீ இல்லாமல் போனாய் என்ற
உண்மையை தின்று
இப்போதே இறப்பதாய்
எண்ணமில்லை!!!

Jan 6, 2011

ஏழாம் அறிவு

இந்த நொடி கடந்து போகும்
எதுவும் நிலையில்லா வாழ்க்கை இது..

பூமிக்கு வரும் முன்னமே...
களவு கற்றோம்..
அன்னையின் உயிர் உறுஞ்சி வாழக் கற்றோம்...
அவளை அப்போதே உதைக்கக் கற்றோம்...
ஒட்டு கேட்கவும் கற்றோம்...
பிறந்த போதே அழவும் கற்றோம்
அழுகை மறைத்து சிரிக்கவும் கற்றோம்...
அன்பில் உருக அழகாய் கற்றோம்..
படைப்புகள் அத்தனைக்குள்ளும் நாம மட்டும் சிரிக்க கற்றோம்...
சிரித்தே சில நேரம் சிதைக்கக் கற்றோம்...
சிந்திக்க ஏனோ மறக்கக் கற்றோம்..
ஜாதி மதத்தில் பிழைக்கக் கற்றோம்..
பணத்திற்கு மட்டும் இறக்கக் கற்றோம்
பாசத்திற்கு துடிக்கக் கற்றோம்
பழி வாங்க பலவகைகள் கற்றோம்
சந்தேகம் அதை முழுதாய் கற்றோம்
சமரசம் அதை மிதிக்கக் கற்றோம்...
தர்மங்கள் செய்ய அரிதாய் கற்றோம்..
சுயநலம் அதை சுயமாய் கற்றோம்
சோகங்கள் வரின் மட்டும் வணங்க கற்றோம்
மூச்சுள்ள வரைக்கும் குறை சொல்ல கற்றோம்
முகத்தில் ஒன்றும் மனதில் ஒன்றும்
பூசி நடிக்க புன்னகை கற்றோம்...
பேசி முடியும் செயலை எல்லாம்
மிரட்டி முடிக்க மிடுக்காய் கற்றோம்..
மீசை முளைக்க தொடங்கும் முன்னமே
ஆசை வளர்த்து அலைய கற்றோம்...
மோகம் கற்றோம்..
விவேகமற்ற வேகம் கற்றோம்....
நாணம் கற்றோம்
நயவஞ்சகம் கற்றோம்...
கொலை செய்ய கற்றோம்..
கோபத்தால் ஏதொன்றும் அழித்திடக் கற்றோம்...
ஆற்றா துயர் வரின் குடிக்கக் கற்றோம்
பெண்ணொன்று பிறந்தால் புதைக்கக் கற்றோம்...
புயலோ பூகம்பமோ வரின் மட்டும்
தோள் சேர்த்திடக் கற்றோம்...

படைத்து அனுப்பியவனிடம்
ஒன்று கேட்க்கக் கூடுமெனில்....

ஆறறிவு கொண்டு நாம்
கற்று வந்த தீயவை எல்லாம்
வடிந்து போன
மூளை பெற்று

நல்வருடம் காண
ஏழாம் அறிவு ஒன்று கேட்ப்போம்!!!!