Nov 27, 2010

உணர்திடு மனமே..

நாளைய விடியல்
உனக்கு வசந்தமாய் வரும்

                          உனது கைவிரல்களில்
                          பூமி சுழலும்...

நம்பிக்கை வை மனமே...

                         நடப்பவை நான்கும்
                         நல்லதே தரும் என

நிம்மதி கொள் மனமே....

விதைத்திட்ட விதை எல்லாம்
நல்விருட்சமாகும்

                       அதுவரை சிரி மனமே...

உயிரோட்டம் கொண்ட இளமை இது
இன்று
வலிகளும் ஏன் மனமே...

                          வாசனை நாட்கள் விரைவில் வரும்...
                          கண்ணீர் துடை மனமே..

வேடிக்கைப் பார்க்கும்
மனிதர் கூட்டமது
வெறும் காகிதக் கத்திகள்..

                       உன்னை பிளக்கப் போவதில்லை...
                       விமர்சனம் மற மனமே....

பார்வையில் இகழும் சிலர்
வீண் பேச்சில்
வீழாதிரு மனமே...

                      சிற்றொரு நொடியில் நீயும்
                      சிகரம் தொட
                      சிறகுகள் விரி மனமே....

கனவுகள் கண்டு
வாழ்பவர் இடையே..
நிஜமாய் வாழ்வதென்று
சபதம் கொள் மனமே...

                        சாவு வரை சமர்த்தாய்
                        அமர்ந்து வாழ்வை படி மனமே...

நட்பைக் காட்டி
நடிக்கும்
சிலரோடு சிக்காது இரு மனமே....

                     தாழ்ப்பாள் ஏதும்
                     காற்றுக்கு அடுத்ததாய்....
                     மனதுக்கு மட்டும் தான் இல்லை
                     சுதந்திரமாய் சுற்று...

சுகம் கோடி உண்டு
உலகில்
பதம் பிரித்து ரசித்திடு
என் மனமே.....

பிரபஞ்சம் முழுதும்
விரிந்து கிடக்கும்
வாய்ப்பை அறிந்திடு...

வாழ்கையை வாழ்ந்திடச்சொல்லி
தோள் தட்டும்

இயற்க்கை....

ஊனம்

சச்சினின் பந்தை
விலாசித் தள்ளி

சிக்ஸர் அடித்து
சிரித்துக் கொண்டான்...

இரண்டு கால்களும்
இல்லாத சிறுவன்...

இடையில் மின்சாரம் தடைப் பட்டதில்...
பாதியில் பறிபோனது
அவனது வீடியோ கேம்
ஆட்டம்!!!

சுமை

மனசுக்குள் ஆசைகளுண்டு...

கண்ணுக்கழகாய் புடவையுடுத்த..
கைவிரல் நகம் தொட்டு சாயம் பூச...
அவ்வப்போது மருதாணி வாசம்
உள்ளங்கை கொள்ள...

கண்ணாடி வளையல் நிறைய போட்டு
எல்லோர் முன்னும் நடை பழக...
லாக்மியின் உதட்டுச்சாயத்தை ஒருமுறை
இதழெல்லாம் படர்த்த...

நிலவொளியில் காதலனுடன்
இரவு ரசிக்க...
புதிதாய் வருகிற படம் பார்த்து
தோழிகளோடு சிரித்துப் பேச...

அந்த சின்னப் பெண்
சாலையோரத்தில் நின்று கனவு காண்கிறாள்...
கையில் விழுகிற சில்லறையை பொறுக்கிக் கொண்டு...

இவளுக்கு...
தங்கம் விற்கிற விலை தெரியாது...
தகிக்கும் போது
தண்ணீர் கூட கையில் கிடையாது...

என்ன இவள் வாழ்க்கை என்று
எண்ணிக்கொண்டிருக்கையில்...

கண்கள் நிறைய கனவுகள் கொண்டு

சாலையைக் கடந்து

சுமந்து போகிறாள் அவள்...
குப்பைகளோடு
ஆசைகளையும்!!!

இலையின் சுயசரிதை!

இன்றோ
நாளையோ...

விழுந்துவிடக்கூடும் நான்..

உயிர் பிரியும் முன்...
கேட்டுவிடுகிறேன்..
மரமே என் மீது பிழை இருப்பின்
மன்னிப்பாயா..?

பக்கத்துக்கு இலையை
காதலித்து..
அதன் காதோரம் கவி சொன்ன
காலமது நிறைவுபெற
இதோ இத்தருணம்...
எழுதுகிறேன் ஒரு சுயசரிதை...

காற்றுக்கு எப்போதும் தலையாட்டும்
செல்லப்பிள்ளையாய்..
வானத்தின் ஒவ்வொரு
வர்ணஜாலத்தையும் கண்டு பூரித்ததுண்டு...

பறவைகளின் பேச்சுவார்த்தை
எனக்கு புரியும்..
இருந்தும் கேளாதது போல்
சிரித்ததுண்டு!

ஓயாது எப்போதும்
ஒளிச்சேர்க்கை செய்ததுண்டு...

மரமே...
மனதார என்னை
தொட்டனுப்பு..
தவறுகள் செய்திருந்தால்
மன்னித்தனுப்பு..

நான் ரசித்தப் பின்
பூமியும் மழையை ரசிக்கும்....

நான் குடித்த மிச்ச நீர்
என் மேனி வடிந்து
மண் நனைக்கும்...

நான் தான் விஷத்தை சுவாசித்து
உயிர் கொண்ட அற்புத ஜீவன்...

சூரியக் கதிரை
முத்தமிட்டு சிலிர்த்ததுண்டு....
மனிதம் பதுங்க..
நிழலாக்கித் தந்ததுண்டு..

அதிகமாய் அள்ளி கொடுத்து
கொஞ்சமாய் வாங்கிக் கொள்கிற
உன்னதத் தொழில் செய்தேன்...

நான்....
மனித ஜாதியும் அல்ல
மகாத்மாவும் அல்ல...

சாயம் போய்விட்டதால்..
சரிந்துபோகும்  ஒரு
சராசரி உயிர்..

சில சமயங்களில்
புயல் வீசும்
அது எங்கள் உறவுகள் சிலவற்றின்
உயிர் வாங்கும்..

அப்போது கொலைநடுங்கிப் போனதுண்டு..

என் உயிர் அன்று பறிக்கப் படாததில்..
இன்னும் கொஞ்சம் உலக சேவை
செய்ய முடிந்தது!

ஏன் இலையாய் பிறந்தோமென்று
என்னை நானே கேட்டுக் கொண்ட போது...
பதில் கிடைத்தது!

பூவாய் பிறந்திருந்தால்
ஒரு நாள் வாழ்க்கைக்காக..
மகரந்தம் விற்று பிழைக்க வேண்டும்..

கனியாய் பிறந்திருந்தால்..
கிளிகளின் பற்களால்
இறப்பு வந்திருக்கும்...

இன்னுமொரு சந்தோஷம்
இலையாய்ப் பிறந்ததில்...

எங்களிடையே..
ஜாதிகள் இல்லை..

காற்று கொண்டு வருகிறது
மரண ஓலை...

மண்ணோடு போகிறேன்...

கிளையே வருந்தாதே...
மரணமென்பது நியதியல்லவா...

நான் இறந்துபடின் மட்டுமே...
இன்னுமொரு புதிய இலை
பூமிக்கு சேவை செய்ய பிறந்து வரும்...

சருகாகி நான் இறந்தாலும்
பூமிக்கு உரமாகி இறப்பதால்
நிம்மதி கொள்கிறேன்...
கலங்காதே மரமே..

நான் மீண்டும் வரலாம்
புதிய இலையாய்..

உன் மடியோடு விளையாட....!!!

Nov 26, 2010

எனக்குப் பிடித்த கவிதை...

நான் எனப் படுவது
உன்னையும் சேர்த்துத் தான்
எத்தனை வரிகளில் நான்
கவிதை செய்தாலும்...

எனக்குப் பிடித்த கவிதை..
உன் சிணுங்கள் தான்!

குற்றம் ஏதும் செய்தால்
என்னை குழந்தை என்பாய்
மற்ற வேளைகளில்..
மகாகவி என்பாய்...

உன்னால்..
உனக்காக...
உன்னோடு மட்டும்
நான் கவியாவதில் ஆனந்தம்...

நோயேதும் என் உயிர் கடைந்தால்
மருந்துகளால்
நலமாகாது...
உன் கண்கள் வார்க்கிற நீர்த்துளி போல்
மருந்தொன்று ஆகாது!

உன்னோடு நானிருந்த
பால் நொடிகள்
மரணப் படுக்கையிலும் மறக்காது...
இப்போது கூட..
இதயம் உன்னை மென்று தான்
சக்தி கொள்கிறது!

இரு நிமிடம் உன்
கை பிடித்து நின்றதெல்லாம்
கரும்பாய் இனித்து கவிதை தருகிறது!

உன் புன்னகை நதியில்
மூழ்கி எழுந்த போது
என் பாவங்கள் கரைந்து போனது...

காதல் என்ற புண்ணியம் ஒன்று
புதிதாய் என்னுள் கலந்து போனது!!!

ஓரிரு நாட்கள்
காணாது போனால்
கலங்கி இருப்பேன்
மறுநாள் கண்டதும்...

இந்த விழி தானே
என்னை தள்ளி இருந்து எரித்த விழி
என்று...

வேகமாய் உன்னை அணைத்து
அழுத கணமெல்லாம்...
மறப்பதற்கு அப்பாற்ப்பட்டது!

உன் காது மடல் ஓரம்
சிறு இடம் கொடு..
காலத்திற்கும் அதில் என்
உயிர் ஊற்றி வைப்பேன்...

உன்னை போல் ஒரு வரம்
நான் எந்த பிறவியில்
வாங்கினேனோ....
யோசித்தாலே பரவசம்!

நீ உடன் இருந்த போது..
பேசாது கடந்த நேரங்களுக்காய்...
அழுகை வருகிறது!

நீளமான வானம்
வெறித்துப் பார்க்கும்
வெய்யில்...
என் தோளோடு உலகம் மறந்து
விரல் கோர்ப்பாயே..
ம்ம்ம்...
மறக்காது!! மறக்காது!!

"நில்" என்று கெஞ்சும் என்னை...
"தள்" என்று சொல்லும் உன்னை

எப்படி துறப்பேன்...????

ஒரு போதும் மறக்காது
உன்னை தின்று காதல் வளர்த்த
நினைவுகள்...

இறுதியாய் ஒன்று..

காதல் கசப்பாகி..
கண்ணீர் விழுந்த போதும்...
கடைசி வரை
நேசம் ஒட்டி இருக்கும்
என் விழிநீரோடு!!!

முயன்று பார்ப்போம்.!

மனசுக்குள் உட்கார்ந்து
மலர் பறிக்கிறாய் - என்
கனவுக்குள் தீ வீசி
குரல் கொடுக்கிறாய்...

என் கவிதைக்கு
வார்த்தையாகி வரம் தருகிறாய்- என்
வாசலோடு நீ மட்டும்
வாசமாகிறாய்..

ஒடியாத கிளை நான் என
உள்ளம் சிலிர்த்திருந்தேன்
கிளி உட்கார்ந்து போனவுடன்..
வளைந்து போனேன்..

வற்றாத கடல் நான் என
வசந்தம் கொண்டேன்
உன்னை பார்த்தவுடன்
மடியோடு வற்றிப் போனேன்...

ஒரு கோடி மின்னல் பூ
மனதுக்குள்
தினம் ஊர்வலம் போகின்ற - நல்
அனுபவம் நீ தந்தாய்...
இதுதான் உயிர் கொள்ள காரணமோ
வியந்து போனேன்..

இறந்தாலும்
கொண்ட காதல் இறப்பதில்லை..
இது உண்மையென்று ஒரு போதும்
நம்பியதில்லை...
இப்போது இதுபோல் ஒரு மெய் இல்லை
புரிந்துகொண்டேன்...

ஒற்றை பார்வையில்
காதல் பற்றியது
மிச்சம்
உன்னை நிலா வெளிச்சத்தில் பார்த்து வந்தது...
நிலா அன்று மிக அருகில் நின்றது!

உற்றுப் பார்த்தாய்...
உயிரே போனது..
என் உயிர் எடுத்து பின் சிரித்தாய்...
மீண்டும் எனக்கு உயிர் வந்தது...

நிச்சயம்..
இனி வரும் காலம்
உன்னை கண்ணுக்குள் வைத்து
காத்திருப்பேன்..
கண்ணே உன் உயிர் வளர்ப்பேன்....

உள்ளுக்குள் ஓராயிரம் சிறகுகள் கொடுத்தாய்..
இருந்தும்..
நதி எங்கே படர்ந்து திரிந்தாலும்
கடலோடு கை சேர்க்கும்...

நானும் அப்படித்தான்...

நீ மட்டும் உடன் இரு
மரணம் அஞ்சுகிற நேசம் கொடு...
காலத்தைத் தின்று செரிக்கும்
காதலது சாத்தியமா...
வா... முயன்று பார்ப்போம்.....!!!

தொல்லை செய்...

 தயவு செய்து
என்னை தொல்லை செய்...

காதலித்து கொள்ளை செய்..

கழுத்தோடு விரலிடு
நான் கோபம் கொண்டால்
உன் மார்போடு சிறையிடு....

மௌனம் கொல்கிறதா
மூச்சு நிற்கும் வரை முத்தமிடு...

காதல் சொல்லியே
தூக்கிலிடு...

உன் கூந்தல் உதிர்வுகளும்
என் இதயத்திற்கு அன்பளிப்பு...

ஓடிப்பிடித்து என்னை சேரு...

குளித்துவரும் என்னை
மீண்டும் அழுக்காக்கு...

எதிர்பாராத போது
என்னை பார்வையால் வெட்டு..

எவ்வளவு முடியுமோ
அவ்வளவு திட்டு...

என்னை கேட்காமல்
சிலமுறை தழுவு..

தாகமென்றால்
என்னையே
தண்ணீராய் பருகு...

என் உயிர்ப்பூவை
கண்டுபிடித்து கைது செய்..

எலும்புகளின் விளிம்புகள் தோறும்
உன்னை புகுத்து..

உனக்கான எல்லாமாய்
நான் இருப்பேன்...
இருக்க வேண்டும் நீயும் தான்...

உனது கனவுகளில் வந்து
கண் திறப்பேன்...

கண்ணாடி முன் நீ நின்றால்..
உன் கை பிடித்து இழுப்பேன்...

திணறடித்து சாகடிப்பேன்...
முத்தங்கள் கேட்டு அழ வைப்பேன்...
தீண்டிவிட்டு ஒளிந்து கொள்வேன்..

என் இளமைக்குள் வழிந்தொழியும் பெண்மையே
உன் மென்மைக்குப்  பணிவேன்...

கண் தூக்கம் கெடுத்து ஒலி செய்வேன்..
கால் கொலுசின் பரல் திருடி புன்னகைப்பேன்...
உன் கண்ணியம் மறக்கடிதுப் பறந்துபோவேன்...

நான் தருகிற தீண்டல்களில்
உன்னுயிர் பயிராகும்...

நாணம் தடுப்பின் அது உன்பாடு...!
நகர்ந்து போகல் ஆகாது!

பத்திரமாய் நீ பார்த்திருந்த
உன் அழகு...
என் நிழல் பட்டு இன்னும் அழகாகும்..

பிடித்திருந்தால்
காதல் சன்மானம் வழங்கு...

காலத்திற்கும்
கலந்திருப்பேன்..

உன்னோடு...

நீங்கினால் உயிர்கொள்ளாது என் உலகு!

Nov 25, 2010

நீ - நான் - நாம்....

இன்னும் வாராத அந்த அழகான நாட்களை
கனவுக்குள் பதுக்குகிறேன்...

நீ வந்தவுடன் உன்னோடு வாழ..!

இனிப்பும் கரிப்புமான
ஒரு இயல்பான வாழ்க்கை..
அந்த நாட்களில்
எனது உள்ளங்கையோடு
உனது கன்னங்கள்..

நினைத்தால் முத்தமிடும் தொலைவில் நீ...
உனக்கு பிடித்தாற்போல்
முற்றிலும் மாறிய நான்..

சரியென்று மட்டும் சொல்லும்
என் செல்லக்கிளி நீ..

உன் சிரிப்புகளுக்காய்...
ஏங்கிக் கிடக்கும் நான்...

உறக்கம் மறந்த இரவுகளில்
என்னைத் தீண்டும் காற்றாய் நீ...

உன்னை முழுதும் விரும்புகிற
அடிமையாய் நான்..

என் கவிதைகளின் தலைப்புகளாய் நீ
உன்னை எழுதவே கவியாய் நான்....

எப்பொழுதும் உன்னை விட அதிகமாய்
என்னை நேசிக்கும் நீ...

உன் நேசிப்புகளில் தொலைந்த மழலையாய் நான்..

பேச்சின் இடையே முத்தம் கேட்க்கிற
தேவதையாய் நீ...

முத்தத்தை நான் மீற..
முகம் சிவக்கும் அந்தியாய் நீ...

எப்பொழுதும் உன்னை இழுத்து
அழுத்தமாய் பார்க்கும் மிருகம் நான்..

"போ" என்று முறைக்கும் பொய் கோபம் நீ...

எதுவும் பிடிக்காத நேரங்களில்
உனக்கான தொல்லை நான்..

உயிர் கூட உடையும் படி
மறுப்புக்கொட்டும் தேனருவி  நீ...

ஆறுதல் தேடி நான்
அழுகும் போது என் அன்னையாய் நீ..

உன் அணைப்பில் தூங்கிவிடுகிற பிள்ளையாய் நான்..

என்றாவது மழை வந்தால்
என் வீட்டுக்குள் குடை நீ..

குடை மீறி கொட்டுகிற சில துளியாய் நான்....

சொல்லிக் கொண்டே போகலாம்
உன்னுடனான என் கனவுகளை...

என்னை பிடிக்குமென்று சொல்...

அழகாய் தான் இருக்கும்
உன்னைப் போல் ஒரு பூக்காடு என்னோடு வாழ வந்தால்....

நீயெனப்படுவது யாதெனில்

 மழையோடு நான் நனைய நேர்ந்தால்
எனக்கான ஒற்றை குடை..

சாலையில் நடக்கும் போது
என் நாசி உரசும் மல்லிகைப் பூ...

சோகமாய் கவிதை செய்தால்
துளிர்த்து விழும் அகரம்..

கோபமாய் பேசிவிட்டால்
மனதுக்குள் மலையருவி...

சந்தோஷமாய் நான் இருப்பின்
அழகுபடுத்தும் புன்னகை...

வேகமாய் நான் விரைந்தால்
என்னை நிதானிக்கச் சொல்லும் வேகத் தடை..

தாகமாய் நான் இருக்கும் தருணம்
தொண்டைக்குள் ஊரும் அமுதம்..

தூக்கம் துடைத்த இரவுகளில்
என் கண்கள் கொண்டாடும் விழா...

மௌனமாய் நான் இருந்தால்
கேட்கச் சொல்லி அடம்பிடிக்கும் இசை..

மோகம் கொண்டு பார்க்கும் போது
திகட்டாத மிட்டாய்....

நீயெனப் படுவது...
என்னை பொறுத்தவரை
இந்த அகிலம் கொண்ட அத்தனையும்....

Nov 23, 2010

வரமாய் வந்தாய்

என்ன எழுத நினைத்தாலும்
என் சிந்தனையில் வந்து குதிக்கிறாய்..

என்னை மட்டுமே எழுதென்று
இம்சிக்கிறாய்.....

தூரத்தில் நிற்கிற
நட்சத்திரத்தின் மீது
குழந்தை கொள்கிற ஆசை போல்...

கள்ளமில்லா காதல் கொண்டேன் உன் மீது....  

உன்னை நீங்கிய என் கவிதைகளை
தாள்கள் சகித்துக்கொள்வதில்லை!

கண்களை இறுக்கமாய் மூடித் திறந்தேன்....

உன்னை அசை போட்டுக்கொண்டே
என் பேனா நகரத் தொடங்கியது....

இரவின் மடியோடு
தேங்கி இருக்கும் நிலா போல்
என் மனதை காவு வாங்கின
உன் கருவிழிகள்..

சுவாசத்துடன் சேர்த்து
என்னையும் உள்வாங்கும் உன்
மூக்கு...

அதை யோசித்த போதே
உன் சுவாசம் என்னை தீண்டியது...

உனது நுரைஈரளோடு
சிக்குவதற்க்குள் தப்பித்துக் கொண்டேன்...

எனக்காகவே விரித்து வைத்த
ரோஜா தோட்டம் போல்
இதழ்கள்..

வானம் வெட்டிப் போட்ட
நகத் துண்டுகளாய்..
கன்னம்...

என் பாலை நெடுவழியில்
பால் சிதறியது போல்
கழுத்து...    

போதும் போ என்று
வெட்கம் கொண்டாய்..

உன் வெட்கத்தில் துளிர்த்ததடி
இன்னுமொரு கவிதை...

நீ வரமா சாபமா....

கவிதை எனக்கு வரம்...

அப்படியென்றால்...

நீ என் கவிதைக்கு வரம்....!

Nov 21, 2010

இன்னும் உயிர் வாழ..

எதிரில் இல்லை என்ற  போதும்
என் உலகம்
இரவு பகல் காண்பது
உன் விழிகளில் அல்லவா..

நான்கு வருடங்கள் நான் கண்ட கனவு..
நாளொன்றில் கரைந்து போக..

என்னை பார்த்தபடியே...
பயணித்தாய் உன் தந்தையோடு...

அன்று இழுத்துச் செல்லப்பட்டது
நீ மட்டும் அல்ல...
நீ உன் உள்ளங்கையில் கசக்கி வைத்திருந்த என் மனதும் தான்!

நீ சிரிப்பாய்...
அன்று களைந்த உன் கூந்தலோடு
காற்று உரையாடும்...
அதை ரசிக்கப் பார்த்து
என் இதயம் அதில் சிக்கிக் கொண்டதுண்டு!

என் வாழ்வில் நீயொரு தூரிகையானாய்...
உன்னை கையில் எடுத்து
நல்லோவியம் ஒன்று
வரைய நினைத்த போது

கொண்டு வந்த வண்ணமெல்லாம்
சிதறியது போல்
அழகுதொலைத்தது என் வாழ்க்கை காகிதம்!   

என்னை பார்த்தபோது
உன் மனம்
நெருடவில்லையா உன் தாய் தந்தை முகம்??

அழுத்தி அழித்தும்
அழியாத ஓர் அணுவாய்..
என்னுள் புகுந்த உன்னை

எட்டி நின்றேனும் பார்த்துவிடுகிறேன் ஒருமுறை...

மீதமிருக்கும் என் வாழ்நாளினை
அது தாங்கிப் பிடிக்கும்!!!

Nov 16, 2010

கணினிக் காதல்

இணைய தளத்தில் சந்தித்தோம்
என்ற போதும்..
இதயத் தளத்தில்
உன்னை இறுக்கமாய் பதித்தாய்....

நம்மிடையே நடந்த அத்தனைக்கும்
கணினியே சாட்சியாக...

கடைசியில் என்னை கையறுநிலையில்
விட்டுப் போனாய்...

இப்போது என் கவிதைகளில் அடிக்கிறது
கண்ணீர் வாசனை..

ஒரு உண்மை தெரியுமா...
நேரில் உன்னை பார்காவிடிலும்

நெஞ்சில் புதைந்துவிட்டாய்
அது சத்தியம்!

யார் சொன்னது
இனையதளத்தில்
இதயங்கள் இணைவது சாத்தியமில்லை என்று...

உன்னைப் போல் ஒரு ஜீவநதி
என்னுள் நுழைந்தது
கணினியின் முகம் பார்த்துத்தான்..

வாழ்கையின் இன்னொரு புறம்
அறிந்தேன் உன்
வாக்கியங்கள் கண்டு...

அதுவரை...
தொழிலாகவே தோன்றிய
கணினியுடனான என் உரையாடல்...

உன்னால் காதலைப் பூசிக்கொண்டது!

காதல் தரவல்ல எந்த சுகத்தையும்
நீ தராத போதும்...

உள்ளுக்குள் ஒரு அமைதி..

நீ தந்த முத்தமெல்லாம்
என் மடிக்கணினியின் முகப்போடு நின்று விட...

என் ஆருயிரே...
அந்த நொடிகளில் நான்
இறந்துபோனதுண்டு இதழ்கள் வறண்டு..

உன்னை சந்திக்க வேண்டுமென்று
ஏக்கம் கொண்டேன்
ஏதும் சொல்லாமல்...
போனாய்...

இந்த அகிலத்தில்
உன்னை எங்கே தேட நான்...

உயிருறுக அழுகிற வானமாய்
ஆனேன் நான்

என் கண்களை பிரிந்திட்ட ஒரு துளியாய்..
கடலுக்குள் புகுந்தாய் நீ..

எத்தனைதான் சொன்னாலும்
வார்த்தைகள் வற்றிப்போய்...

வெறுமை தின்று சிரிக்கின்ற
காகிதக்குப்பைகள் நடுவே....

கசங்கி கிடக்கும் என் மனதை
என்ன சொல்லி ஆற்றுவேன்....????

நீ எப்படி இருப்பாய் என்று யோசித்தபடி
நிலா முகம் கண்டு
புன்னகைத்தேன்...

அவசரமாய் வந்து
பயிர் சேதம் செய்யும்
அடைமழை போல்

என் உயிர் சேதம் செய்த உன்னை...

இன்னுமொரு ஜன்மத்திலேனும்
கண்டுபிடிக்க ஆசை!

Nov 8, 2010

ரயில் பயணம்

நினைவுப்படுத்திப் பார்க்கிறேன்
நெடும் பயணம் ஒன்று
நொடிகளில் கடந்ததை...

எதிர் இருக்கையில் அமர்ந்த போதும்
என் மனதின் ஓரமாய்
அரியணை இட்ட உன்னை
நினைதுப்பார்தாலே
பரவசம்...

யார் நீ
உன்னால்
என் இதயத்தில் சலனம்...
சின்னதாய் ஒரு பூகம்பம்!

உன்னை அந்த நொடியே
தின்று விடுவது போல் பார்த்த
என் கண்களை நான்
திட்டிக்கொண்டிருந்த போது...

"போதும் திரும்பு" என்பது போல்
ஒருவர் என்னை முறைக்க...

திரும்பிக்கொண்டேன் ஜன்னல் பக்கம்...

கண்களில் ஒட்டிவிட்ட உன்னை
உதறவும் முடியாமல்
சிதறிப்போனேன்...

ஏதாவது பேசு என்று
என்னை உந்திக்கொண்டிருந்த மனசாட்சியோடு
சண்டைப்போட்டுக் கொண்டிருந்தேன்...

மறுகணம்..
நீயே பேசினாய்...

அன்று வந்த மழைக்கும்
இறுகிப்போயிருந்த ஜன்னல் கதவுக்கும் நன்றி!

உன் மீது சாரலாய்ப் பட்டு
தீர்தமாயின மழைக்கரங்கள்!

நான் பார்க்காத போது
உற்றுப்பார்தாய்...

நான் பார்த்ததும்
நெற்றி முடி விளக்கி
உனக்குள் சிரித்தாய்..

அதுவரை பயணத்தையே வெறுத்த நான்
முதன்முறையாய் ரசித்தேன்...
இன்னும் நீளக்கூடாதா என துடித்தேன்..

நீ படுத்துறங்கிய போது
போர்வைக்கிடையே நிலவரும்பாய்  தெரிந்த
உன் முகத்தைப் பார்த்துக்கொண்டே...
தூங்கிப் போனேன்....

நான் விழித்த போது...
நீ இருந்த இருக்கை
என் முகத்தில் வெறுமையை
அறைந்தது!!!

குறுக்கும் நெடுக்கும் கடக்கிற
பயணிகளின் நடுவே
உன்னை தேடிக் கலைத்தேன்...

நான்கு வருடங்கள் கடந்த பின்னும்
எனக்குள் வேரூன்றிவிட்ட உன்னை
கலைக்கப் பார்த்து
களைந்து போகிறேன்!!!

அடுத்த முறை சந்தித்தால்..
எதிரெதிர் இருக்கையில் வேண்டாம்....

அருகருகே அமர்ந்து பகிர்ந்து கொள்ளலாம்....

மனம் கொண்ட அவஸ்தைகளை!!!

Nov 3, 2010

சில சம்மதங்கள்....

தங்க முலாம் பூசி வந்த
என் சந்தன பேரழகே...
உன் குங்கும சிரிப்புக்குள்
உயிர் பதுக்க சம்மதம்...

நிலாவின் கிண்ணத்தில்
நெருப்பு சேர்த்தாற்போல்
வடிகிற உன் கண்ணீர் துளிகளை
தடமின்றி துடைத்துவிட்டு
சருகாக சம்மதம்..

வான் கொட்டும் மழையாய்
வரம் தருவது போல் நீ பொழிய
உன் தேன்வார்ப்புகள்  ரசித்து
தேங்கி இருக்க சம்மதம்...

நெற்றி முடி விலக்கி
சித்திரமாய் நீ சிரிக்கும் போது
உன் முகம் கண்டு
கண் சிவக்க சம்மதம்...

திகட்டும் அளவு உன்னை
பருகி விட்டு
திருட்டுத்தனமாய் மீண்டும்
உன்னை சீண்ட சம்மதம்....

கவி எழுதி
உன் தோளில் தலை சாய்த்து
படித்து காட்டி..
முத்தப்பரிசுகள் வாங்கிட சம்மதம்...

மழலையாய்
நீ சிணுங்கும் போது..
என் மார்போடு உன்னை
பதுக்கிட சம்மதம்...

பொய் சொல்லி அழ வைத்து
பின் என் விரல்களில் இதயமிட்டு
விழிநீர் துடைக்க சம்மதம்...

உன் பாதத்தில்
பரவசமாய் பாடுகிற
கொலுசின் பரல் ஒன்றாய் நான் வாழ்ந்து
என் காதலை நினைவூட்ட சம்மதம்...

கவிதை..
வெறி பிடித்து என்னை வாதம் செய்யும்
அப்போது உன்னை எழுதியே
கரையேற சம்மதம்....

நித்திரை தொலைத்த
நடு இரவில்
நீ புரண்டு படுக்கும் அழகை
ரசித்திட சம்மதம்....

ஆனந்தமாய் நீ அழுதால்
உன்னை எப்போதும் அப்படியே
பாதுகாப்பேன் என
சத்தியம் செய்திட சம்மதம்...

"புகழாதே போ" என்று
வெட்கம் காட்டினால்
உன்னை உலகம் மறந்து
தின்றுவிட சம்மதம்...

பொய் கோவம் நீ கொண்டால்
பூவாய் மாறி
உன் நிலா கன்னத்தை
தழுவிட சம்மதம்...

மருந்தில்லா நோயேதும்
என்னை வந்து பிழியுமானால்..
உன் மல்லிகை மடியோடு
தூங்கிவிட சம்மதம்...

இந்த நிலம் தோறும்
நம் காதலுக்கு எதிரிகள் முளைத்தாலும்
தாரகை உன்னை சுமந்து கொண்டு
வேறு தேசம் போக சம்மதம்...

என் வாழ்வின் கடைசி
நாள் வரை...
உன்னை மட்டும் சுவாசித்து
உயிர் கொள்ள சம்மதம்...

பிரிந்திட வேண்டுமென்று
விதி ஒன்று வருமானால்...
உன்னையே சேர்த்தணைத்து
செத்துவிட சம்மதம்!!!

என்ன செய்யும் அந்த மரணம்???

அன்னமே
ஆயுள் ரேகையே...
என் ஆவி குடித்த ஓருயிரே...

நாளும் நெஞ்சில்
நயமாய் கிடந்து
உயிர் வளர்த்த ஓவியக்காதல்...
உள்ளத்தை உடைக்க...

இப்போது வரைந்து முடிக்கிறேன்
ஒரு ஆறுதல் கவிதை....

வானத்தோடு முழுநிலா ஒன்று
வந்த தடமின்றி
அவசரமாய் கலந்தது போல்
ஆனதே நம் காதல்....

பல முறை பார்த்ததும்
பவுர்ணமியாய் வியர்த்ததும்

கண் மூடி கண்ட
கனவாய்..
களைந்தே தான் போக....

என் நெஞ்சின் வேராய்
இருந்தவளே
எங்கே தான் போனாயோ....

உன் சின்ன இதழ் முழுதும்
சித்திரம் தான் வரைந்து
விழியோரம் தேடல் பல செய்து

மோகத்தின் மேடுபள்ளம்
முற்றிலும் கண்டது
ஒரு காலம்....

உன்னை
சிறுவிரலால் தொட்டு
முகம் முழுதும்
எழுதுவேன் ஒரு காவியம்...

நான் இன்று தொடங்கி வைத்த
நம் காதல் கதையோடு
தேனே விழுந்ததடி

பிரிவுத் தீ!!!

தாகத்தில் தகிக்கும் போது
என் மோகனமே
உன் தேசமெங்கும் இருக்கும்
என் ஆளுமை...

உன் அகம் அறிந்து
முகம் பார்த்த நான்

இப்போது
என் நகக்கண்ணில் வலிக்கொண்டு
தனித்திருக்க...

எந்த தீவில் உன்னை அடைத்தது
இந்த உலகம்????

பனிப்பூ உன்னை பார்த்து
பகல் முழுதும்
பேசுவேன்
கவிதை

உன்னை பிரிந்து இப்போது
நினைவிழந்து போனது நெஞ்சு!

காற்றாகி காதல் சொன்ன நித்திலமே....
என் இதயத்தை சுமந்து கொண்டு
நீ எந்த தேசம் சென்றுவிட்டாய்....

மறைப்பதாலா மறைந்துவிடும்
மல்லிகையின் மனம்....

கொஞ்சம் சிதறுவதாலா வற்றிப்போகும்
ஆழ்கடல் ஆழம்...

இல்லை...

காதல் சுமைகள்
நெஞ்சுக்குள் சுகம்!

தூக்கம் தழுவ மறுக்கின்ற
கண்ணிமையும்...
பேச மறுத்து
வார்த்தை தின்னும்
இதழும்...

மௌனமாய் உன்னை
நினைத்து நினைத்து
நிம்மதி கொள்ளும்....

நானாக இப்போது
நானில்லை கண்ணே

தேனாக பொழிந்திட நீயுமில்லை....

தானாக வருகிற விழிநீரை துடைக்க
யாருமில்லை...

உன்னை கனவிலேனும்
உச்சி முகர்ந்து
சிலிர்க்கிற
என் காதல் மட்டும் போதும்...

ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருப்பேன்....

என்னை..
என்ன செய்யும் அந்த மரணம்??

களைந்த கனவு

பாதி தூக்கத்தில்
எழுந்ததில்லை
அன்று மட்டும்

எனக்கே தெரியவில்லை...
என்ன ஆனது...
சொல்லவும் யாருமில்லை....

வந்தாய்
நின்றாய்...
ஏதேதோ சொன்னாய்...

என் கனவு புலத்தில்
சின்னதாய் ஒரு அதிர்வு...

எழுந்த போது
எல்லாம் இருளாய்...

இரவின் அழகையே கெடுப்பது போல்...
இடையில் நான் மட்டும்
விழித்தேன்...

நீ வந்தாயே...
நின்றாயே...
எங்கே போனாய்...

என் கண்களில் கனவு ஊர்வலம்
நடத்திவிட்டு
காணாமல் போனாய்...

சுகமாய் தான் இருந்தது
உன்னால் தூக்கம் களைந்தது....

நேரில் இருந்தால்
உன் நிழலை கூட
தொடமுடியாது துடிப்பேன்

கனவில்...
உன் கை தொட்டு...
கன்னம் நனைத்தேன்...

அது சரி...

விடியும் வரை..
உன்னை எண்ணி
உறங்காது கிடந்தேன்...

சில துளிகள் கண்ணீரோடும்...
பல துளிகள் தண்ணீரோடும்....

முடிந்தது
என் அந்நாள் இரவு....

Nov 2, 2010

தொல்லை

நீ பேசாது போனால்
ஒரு விதமாய் வலிக்கும்...

பேசிவிட்டு பிரிந்தால்
ஒரு விதமாய் வலிக்கும்...

பார்க்காமல் போனால்
உயிர் மரிக்கும்

பார்த்துவிட்டால்
என் இளமையின் எல்லைக்குள்
எரிமலை தகிக்கும்..

தள்ளியே நின்றால்..
ரத்தத்தில் பசிக்கும்...

நீ அருகில் வந்தால்
என் நாடியும் துடிக்க மறக்கும்...

சிரிக்காது போனால்...
என் செல்லெல்லாம்
சிதறும்...

சிரித்துவிட்டால்
கண்களுக்குள் பூக்கள் பூக்கும்...

தொடாது போனால்...
என் உடலே சிறையாகி
என்னை தண்டிக்கும்...

தொட்டுவிட்டால்...
வானமே என் வீடாகும்...

மொத்தத்தில்...
நீ இருந்தாலும் தொல்லை...
இல்லாவிட்டாலும் தொல்லை....

பிரிவுரை

என் அருமை காதலே
ஏன் பிரிந்தாய்

ரோஜாக்கள் கேட்டாய் நீ
என
மனதுக்குள் பதியம் போட்டேன்

கண்ணீர் துளி கொண்டு
காவல் வார்த்தேன்

என் பூமி பார்த்த
முதல் பூவே...

மனதுக்குள் போட்ட பதியம்..
மலரும் முன் ஏன் பிரிந்தாய்...

விடைபெறும் நாளில் மட்டும்
என்னை பேசச்சொல்லி இம்சித்தாய்...

என் நாக்கில்
மௌனம் இறுக்கமாய்
அமர்ந்து கொண்டது...

ஏன்...
கனவுகளில் மட்டும் வந்து
நலம் கேட்கிறாய்...

உண்மையில் நீ பிரிந்த நாளில் தான்
நான் இறுதியாய் வாழ்ந்தேன்...!!!

அழுதாயே அன்று...
என் தோள் சாய்ந்து..

உன் அழுகையை துடைக்க
ஏன் இதயமும் நீண்டதே
தெரியுமா...

"உனக்கு மட்டும் நான்" என்று
உறுதிமொழி பேசிவிட்டு
எங்கே போனாய்??

உலகின் துயரங்களை
ஒட்டுமொத்தமாய்
எனக்கு தந்துவிட்டு ???

நமக்குள் பிரிவு வந்தால்....
கண்ணீரால் புள்ளி வைத்து
தொடங்கி வைப்பவள் நீயல்லவா...

இந்த பிரிவின் நீடிப்புக்கு மட்டும்
ஏன் மௌனத்தை பதிலாக்கினாய்..?

உன் மொழிகள் புரியாது...
வெறித்துப் பார்ப்பாய்...
அர்த்தம் தெரியாது...

நான் எதிர்பாராத போது
என் கண்ணுக்குள் கண் வைத்து
காதல் பூசுவாய்....

எப்போதாவது தேடி வந்து முத்தம் கேட்பாய்
என் இதழ்கள் சிலிர்த்துப்போகும்..

உன் இதழ்களை
விரல் கொண்டு தடவும் போதும்....
கடல் அலையாய் நகர்ந்து போவாய்....

பொய் சொல்ல நினைத்து
உன்னிடம் மாட்டிக்கொள்ளும் போதெல்லாம்...
என் அம்மாவின் வாசனை
உன் மீது அடிக்கும்..

உன்னை காதலிக்கும் வரை....
என்னை நான் ஒருமுறை கூட
உற்றுப் பார்த்ததில்லை

இன்னும் சொல்லவா...
என்னை யாரும் உயிர் வரை உரசிப்போனதில்லை....

நீ தானே..
மாலை வரை என்னை
இதமாய் தொடர்வாய்...

நான் கலங்கிய போது
கை விரல் கொடுப்பாய்...

இப்போது எப்படி அன்பே...
உன்னை விட்டு நான்...???

என்னை பிரிந்த அந்நாளில்
நீயும் துடித்திருப்பாய்...

தூக்கம் துறந்து தேய்ந்திருப்பாய்....

கண்களின் ஓரம் எனக்காக
கண்ணீர் வடித்திருப்பாய்...

தெரியும்...
என்னை பிரிந்த போது..
நீயும் தான்
செத்திருப்பாய்...

இருட்டுக்கு தெரியாது
நிலாவின் அருமை...
தன்னுடன் அது இருப்பதால்....

நானும் தெரிந்து கொள்ளவில்லை
உனது பெருமை...

உயிர் சிந்தி அழுதாலும்
ஆற்றாது வலி....

சொல் என் சிநேகிதி...

மனதுக்குள் நான் போட்ட
ரோஜா பதியம்
மலரும் முன்
ஏன் பிரிந்தாய்....????

என் நிலா மகள்

யாரது
ராத்திரி வரப்போகும்
தேவதைக்கு

இப்போதே பன்னீர் தெளிப்பது...?

மழையென்ற பெயரில்
அவளை
தொட்டு நனைக்க வந்துவிட்ட
தீர்த்தங்களே

நான் கூட
உங்களைப் போலத்தான்

அவளை
தொட நினைத்து
காத்திருக்கிறேன்
பல காலமாய்..

இத்தனை வண்ணக் கோலமா
வானோடு..

இரவினை அழகு செய்ய
என்னவள் வரும் நேரம்!!!

தூரமாய் போ மழையே...
உன் தூரலில் கரையக்கூடும் அவள்..

காற்றே
போதும் உன் முரட்டுத்தனம்..
மெதுவாய் உலவு..
அவள் மென்னிடை வருந்தக்கூடும்..

அதோ
அவள் பெயர் சொல்லி
சிரிக்கின்றன..
முகில் கூட்டங்கள்...

தீயில் கூட தேன் வார்க்கும்
கள்ளி அவள்...
அவளை வரவேற்க
எத்தனையோ வண்ண புடவைகளை
உடுதிப்பார்த்து விட்டு
இறுதியாய்...
நீல நிறத்தை போர்த்திக்கொண்டது வானம்...

வானமே..
நீயும் மோகத்தில் புத்தி இழந்தாய்

இரவில் வரப்போகும்
அந்த தாரகைக்கு..
நீ கருப்பாகவே காட்சியளிப்பாய்...

சூரியனை மெருகேற்ற
யாரோ கொண்டு வந்த
வண்ணமெல்லாம் சிதறிவிட்டத்தில்...
வானத்தின் வாசலில் வண்ண விழா...

சுட மட்டுமே
தெரிந்த சூரியனும்..
அவளால் குளிர்ந்து போவான்

ஒவ்வொரு இரவும்
அல்லியின் வருகையால்...
அழகாகும்..
ஒரு முறை பார்த்துவிட்டு
போவதாய் சொல்லி விட்டு
நட்சத்திரமெல்லாம்...
தவமிருக்கின்றன...

அவளை காண..
ஆயிரம் கண்கள் படைக்கப்பட்டாலும்

என் கண்களுக்கு வறுமையே மிஞ்சும்...

அந்த அழகியை போல் ஒரு
பவுர்ணமி வரக்கூடுமென்றால்
என் ஆயுள் முழுதும் நான்
வானமாகவே காத்திருப்பேன்..

அவளுக்காக சிவந்த அந்தி...
அப்படியே இருக்கிறது

வரச்சொல்லுங்கள் அவளை...

என்னிடம் கவிதைத்தாள்களும்
நிறைய இருக்கின்றன...

எதுவானாலும் கொடு

சுவாசிக்கவும் முடியவில்லை
தாகம் என்னை குடிக்கிறது

உன்னை மறந்துவிட்டதாய் மகிழ்ந்துகொண்டேன்
மறுகணம் உன் முகம்
என் உயிருக்குள் கூச்சலிடுகிறது..

மழையில் நனைந்து
ஒதுங்கப்பார்க்கும் மாலை நேரக்காற்றாய்
உன் மடியோடு
நான் புதையப்பார்க்கிறேன்...

என் மன அலமாரியில்
இதுவரை
கோவங்களும் வேகங்களும்
அடுக்கி வைத்த புத்தகங்களாய்...

நீ வந்து
மாற்றினாய்..
காதல் கீதைகளாய்..

என் முதல் கவிதை பிரசுரமானதும்
நான் கண்ட அதே ஆனந்தம்

உன்னை காணும் போதெல்லாம்
மீண்டும் மீண்டும்...

உனக்கு தெரியாது..
உன் பெயரை எழுதிய பின் தான்
என் பேனாக்கள் எழுத்து யாத்திரையை
தொடங்குகின்றன..

சில சமயம்..
நீ பேச மாட்டாய்...
கண்களை மூடி போகும் என் கண்ணீர் துளிகளால்...
என் தொடைக்குள் வறட்சிக்காலம்..

உன்னை எண்ணி
வருந்துகிற போது வருகிற...
கவிதைகளில் கூட...
பிரிவு வாசனை...
உனக்காக காத்திருந்து
காத்திருந்து..

என் காலடியில் வியர்வைக்கடல்..

உயிரே..
நீ கொண்ட காந்த அலைகளால்...
ஈர்க்கப்பட்டு
எனது இதயம்..
ஒட்டிக்கொண்டிருக்கிறது
உன் காலடியில்..

அன்பே,,
மொழிகளின் வரவுகளால் தான்
மௌனம் மறக்கப்படும்..

உன் மௌனத்தின் இடர்வுகளால்
நான்..
மொழி மறந்ததென்ன ??

புன்னகை கொண்டு நீ என்னை
தழுவும் போது..
உன்னை தொட்டுப்போக..
என் பத்து விரல்களும் அடம் பிடிக்கும்..
அறிவாயா??

உன்னால் நான் சந்திக்க போவது
மரணமா
வாழ்வா

தெரியாத போதும்...
இரண்டையும் நேசிக்கிறேன்..

அது உன்னால் வருவதால்...