Nov 3, 2010

சில சம்மதங்கள்....

தங்க முலாம் பூசி வந்த
என் சந்தன பேரழகே...
உன் குங்கும சிரிப்புக்குள்
உயிர் பதுக்க சம்மதம்...

நிலாவின் கிண்ணத்தில்
நெருப்பு சேர்த்தாற்போல்
வடிகிற உன் கண்ணீர் துளிகளை
தடமின்றி துடைத்துவிட்டு
சருகாக சம்மதம்..

வான் கொட்டும் மழையாய்
வரம் தருவது போல் நீ பொழிய
உன் தேன்வார்ப்புகள்  ரசித்து
தேங்கி இருக்க சம்மதம்...

நெற்றி முடி விலக்கி
சித்திரமாய் நீ சிரிக்கும் போது
உன் முகம் கண்டு
கண் சிவக்க சம்மதம்...

திகட்டும் அளவு உன்னை
பருகி விட்டு
திருட்டுத்தனமாய் மீண்டும்
உன்னை சீண்ட சம்மதம்....

கவி எழுதி
உன் தோளில் தலை சாய்த்து
படித்து காட்டி..
முத்தப்பரிசுகள் வாங்கிட சம்மதம்...

மழலையாய்
நீ சிணுங்கும் போது..
என் மார்போடு உன்னை
பதுக்கிட சம்மதம்...

பொய் சொல்லி அழ வைத்து
பின் என் விரல்களில் இதயமிட்டு
விழிநீர் துடைக்க சம்மதம்...

உன் பாதத்தில்
பரவசமாய் பாடுகிற
கொலுசின் பரல் ஒன்றாய் நான் வாழ்ந்து
என் காதலை நினைவூட்ட சம்மதம்...

கவிதை..
வெறி பிடித்து என்னை வாதம் செய்யும்
அப்போது உன்னை எழுதியே
கரையேற சம்மதம்....

நித்திரை தொலைத்த
நடு இரவில்
நீ புரண்டு படுக்கும் அழகை
ரசித்திட சம்மதம்....

ஆனந்தமாய் நீ அழுதால்
உன்னை எப்போதும் அப்படியே
பாதுகாப்பேன் என
சத்தியம் செய்திட சம்மதம்...

"புகழாதே போ" என்று
வெட்கம் காட்டினால்
உன்னை உலகம் மறந்து
தின்றுவிட சம்மதம்...

பொய் கோவம் நீ கொண்டால்
பூவாய் மாறி
உன் நிலா கன்னத்தை
தழுவிட சம்மதம்...

மருந்தில்லா நோயேதும்
என்னை வந்து பிழியுமானால்..
உன் மல்லிகை மடியோடு
தூங்கிவிட சம்மதம்...

இந்த நிலம் தோறும்
நம் காதலுக்கு எதிரிகள் முளைத்தாலும்
தாரகை உன்னை சுமந்து கொண்டு
வேறு தேசம் போக சம்மதம்...

என் வாழ்வின் கடைசி
நாள் வரை...
உன்னை மட்டும் சுவாசித்து
உயிர் கொள்ள சம்மதம்...

பிரிந்திட வேண்டுமென்று
விதி ஒன்று வருமானால்...
உன்னையே சேர்த்தணைத்து
செத்துவிட சம்மதம்!!!

1 comment:

  1. Nandraga irukkiradu ungal tamizh kavidai.. nanri

    ReplyDelete