Mar 16, 2011

இதை படித்துவிடு ஒருமுறை

புரிகிறதோ இல்லையோ...
இதை படித்துவிடு ஒருமுறை....

உன்னை எண்ணி விம்மிக் கொண்டிருக்கும்
என் வெள்ளைத் தாள்களில்

கருப்பு நிற உதிரத்துளிகள்..

ஒவ்வொன்றும் என் நரம்பினை கிழித்து வந்த
காதல் மொழிகள்...

சலனமே இல்லாத உன் முகம்
தொட்டதும் என் விரலோடு ஓட்டுகிற சிவப்பு தேகம்...
என் உயிரையே இரண்டாய் பிளக்கும்
உன் உச்சந்தலை வகுடு...
தொலைந்து போகச்சொல்லி என்னை தொல்லை செய்த கண்கள்...
கட்சிதமாய் என்னை களவு செய்த மூக்கு...
எந்த கவிதையாலும் வர்ணித்துவிட முடியாத இதழ்கள்..


இப்படி நான் என் சுயம் இழந்து
சொல்லுகிற பொழுதில்
பொய்க்கவி என்று நீ அழைப்பாய்...
உன் மெய்ச்சிரிப்பில்
சலவை செய்யப்பட்ட என் கவிதைகள் எல்லாம்
உலகத்தின் தூய்மையான உண்மைகளாய்
உருவேடுத்தனவே....

அதுவெல்லாம்
என் மரணப்படுக்கையில் கூட
மறக்காதிருக்கும்..

உன் கண்ணசைவெல்லாம்
கவிதையென்று விழுந்த
காதல் பொழுதுகளை
மறக்கச்சொல்லி கட்டளையிட்டாய்

எனதாகி இருந்த எல்லாவற்றிலும்
உன் பெயர் எழுதிய பின்
உன்னை விடுத்த வாழ்க்கை
எப்படி சாத்தியமாகும்?

புரிகிறதோ இல்லையோ...
இதை படித்துவிடு ஒருமுறை....

உயிரை காகிதமாக்கி
உன்னை தூரிகையாக்கி
என் இதயத்தை நிரப்பிய
உதிரத்தை எல்லாம் வண்ணமாக்கி
வரைந்த ஒரு காதலோவியம்

முழுதாய் வரையப்படும் முன்
கலையப் பட்டதில்....

உன்னை எண்ணி விம்மிக் கொண்டிருக்கும்
என் வெள்ளைத் தாள்களில்

கருப்பு நிற உதிரத்துளிகள்..

ஒவ்வொன்றும் என் நரம்பினை கிழித்து வந்த
காதல் மொழிகள்...


Mar 13, 2011

ஆதலால் உன்னைப் பிடிக்கும்

அருகருகே அமர்ந்திருந்த போதும் 
கண்ணியம் மாறாது பேசுவாய்..

என்னைப் போல் யாருமில்லை என்பாய் 
எனக்காக எனில் எதுவும் செய்வதாய் சொல்வாய்...  


நான்  உன் மீது கோபம் கொண்டாலும்
வீடு வரை வந்து என்னை
பத்திரமாய் விட்டுச்செல்வாய்....


உன்னை சந்திக்க வரும்
ஒவ்வொரு முறையும்
தாமதமாய் வருகிற என்னை
முத்தம் கேட்டு இம்சிப்பாய்....

உன்னை பார்க்காத நாட்களில்
பத்து முறையேனும்
தொலைப்பேசியில் அழைப்பாய்....
நான் உன்னை "தொல்லை" என்றாலும்
தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பாய்...

நடுஇரவில் நான் எதிர்பார்க்காத போது
என் நெஞ்சில் தலை புதைத்து தூங்கு என்று
குறுஞ்செய்தி கொடுத்து
கூச்சம் கொள்ள செய்வாய்....

நான் உன்னுடன்
இல்லாத தருணங்களில்
நட்சத்திரம் எல்லாம்
உதிர்ந்து விடுவதாய் கவிதை எழுதுவாய்...

தூரல் நின்றாலும்
மிஞ்சி இருக்கிற ஈரம் போல
காதலின் வார்ப்புகள் முடிந்த பின்னும்
உன்னோடு மிஞ்சி இருக்கும் தீரா தேவைகள்..

உன்னுடனான என் பொழுதுகள்
நீள வேண்டுமென்று ஆசைப்பட வைக்கிற
உன் குறும்புத்தனங்கள்...

அவசரமாய் கிளம்பி வந்ததில்
நான் சரி செய்ய மறந்த என் கூந்தலை
சரி செய்யும் சாக்கில்

நீ என் முகம் தடவும் நொடிகளில்
நான் தடுக்கவும் முடியாது
தாங்கவும் முடியாது உடைந்து போன காலங்கள்....

நான் நகம் வெட்ட மறந்து போனேன்
நீ பற்களால் கடிக்கும் சாக்கில்
என் விரல்களை
முத்தமிட்டாய்...

அந்த மோகம் வழிகிற நிமிடங்கள்...

பேருந்தில் எப்பொழுதும் என் பின்னல்
நிற்கும் உன் மீது
சாய்ந்து கொள்ளத் துடிக்கிற
என்னை கட்டுப் படுத்த முடியாது
நான் உனக்காக உருகிய மாலைப் பொழுதுகள்..

எல்லாம் அழகானவை....

நீயும் தான்!


Mar 10, 2011

நிஜம் நினைவிலிருந்தது

என்னை பிடித்திருக்கும்  என்று
நினைத்துத் தான்

உன்னை பிடித்ததாய்
சொல்லி முடித்தேன்....

என்னை பிடிக்குமென்றாய்

அப்போது முதல் முறையாய்
கால்கள் மண்ணில் படாத போதும்
நடந்தேன்

ம்ம்ம் மிதந்தேன்....

என் தோளில்
தலை சாய்த்து நீ கிடக்க
உன் தலை முடியோடு
கதை பேசியது என் தாடை....

என் மீது உன் சட்டை
உரசியதில்
வெட்கத்தில் குனிந்த தலை நிமிரவில்லை என் பேனா....

உன்னை அருகில் வைத்துக் கொண்டு...
உன்னையே கவிதையாய் செதுக்கிக் கொண்டிருந்தேன்.....

அன்று
மேகம் நிலவை மறைக்க....

உன் சுவாசக் காற்று
என் நுரை ஈரலுக்குள் நுழைந்த அழகை
எப்படிச்சொல்ல....

என் இடது கையேடு
உன் கை பிணைத்து.....

சிரித்தாய்....

அன்று நான் எழுதிய கவிதையும்
அத்தனை அழகாய் இருக்கவில்லை....

என்னை நீ தொல்லை செய்யக் கூடாதென்று
அமைதியாய் இருந்தாய்

உனக்கென்ன தெரியும்.....

உன் அழகும் ஸ்பரிசமும்
என்னை கொன்று குவித்த நிலை.....

இப்படியும் ஒரு அனுபவம்
உன்னோடு கிடைத்துவிட்ட சந்தோஷத்தில்
சிலிர்த்துக்  கிடந்தேன்.....

என்னை யாரோ உலுக்குவதாய்
உணர்ந்து

கண் விழித்தேன்.....

அருகில் என் அம்மா!!!

தூக்கம் களைந்து
எழுந்த போது....

நிஜம் நினைவிலிருந்தது....

சில நாட்களுக்கு முன்
நீ என்னை பிடிக்கவில்லை என்றதும்

பிரிந்து சென்றதும்!!!Mar 8, 2011

உலகின் அத்தனையும்

நீயும் நானும்
உயிர்த்திருக்க காரணம் அவள்...

பெண்ணெனப் படுகிற
பெரும் மேதை அவள்...

அசையும் சித்திரம் அவள்...
ஆழத் தத்துவம் அவள்....

எத்தனை அடித்தாலும்
மௌனமாய் பொறுக்கும்
பூமியுமவள்....

கொஞ்சமாய் நீ நேசித்தாலும்
நெஞ்சம் முழுதும் உன்னை நிரப்பிக் கொள்பவள்....

வஞ்சமே செய்தாலும்
வாஞ்சையோடு உன்னை மன்னித்து சிரிப்பவள்....

அன்னையும் அவள்...
அந்த சொல்லின் உண்மையும் அவள்.....

நதிகளும்
அவள் பெயரை சூடிக் கொண்டு...
பெண்மைக்கு பெயர்ந்தது

அவள்
உரிமை நாடி
கடமை செய்பவள்....
மடமை துறந்த ஞானி அவள்...

கண்ணிமைக்கும் நொடியில்
என்னவும் செய்வாள்

கலையனைத்தும் கற்ற
கன்னியவள்....

கண்ணசைவுக்கு பணியும்
காட்டாறு!

அவளுடனான எந்த உறவும்
அன்பை அடித்தளமாக்கி
அமையுமென்பதால்.....

நீரின்றி அமைந்தாலும்

அவளின்றி அமையாது
உலகு....

குறும்பும் கோபமும் அவளின் இருபுறம்..
வானம் தொட்டு
பறக்கவும் முடியும்...
அது தான் நிதர்சனம்...

தீண்டும் வரை
தென்றல்....

தீண்டிய பின் தெரியும்
தீயின் பிளம்பவள்.....

சுற்றுகிற உலகின்
சுழற்சி விசை...

உலகின் அத்தனையும் அவள்


பெண்ணெனப் படுபவள்.....

Mar 3, 2011

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...

நீ படிப்பதற்காகவே
எழுதப் பட்ட கவிதைகள் எல்லாம்

படிக்கப் படாமலேயே
கிழிக்கப் பட்டத் தருணங்களைப் பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...

நீ கேட்பதற்காகவே
ஒளிப்பதிவு செய்த வார்த்தைகள் எல்லாம்

கேட்கப் படாமலேயே
எரிக்கப் பட்டது பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.....

உன்னை பார்ப்பதற்காக
உன் தெரு முனையில்

மணிக்கணக்காய் காத்துக் கிடந்தது பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.....

உனக்கு பிடித்த பொம்மை ஒன்றை
பரிசளிக்க ஆசைப்பட்டு

இதுவரை என் வீட்டுக்குள்
புதைத்து வைத்தது பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை..

உன்னுடன் பேசவே
அருகில் வந்து....

தோற்றுப்போன போதும்...
உன் ஒரு புன்னகைக்காய்
தவமிருந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.....

உனக்காக வாங்கிய ரோஜாப்பூவும்...
காய்ந்த சருகாய்
என் அலமாரியில் இறந்து போனதென்று
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.....

உன் சிநேகிதியின் மரணம்
உன்னை விட என்னை பாதித்ததில்

இரண்டு நாள் நான் பசித்திருந்ததேல்லாம்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை....

அன்றொரு நாளில்
என்னை உரசி நீ நடந்த பொது

உன்னை பற்றிக் கொள்ள துடித்த
என் விரல்களை நான்
திட்டித் தீர்த்து பற்றி
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...

ஏதோ ஒரு நினைப்பில்
நீ என்னை தொட்டுப் பேச

என் இதயம்
வெளியே குதித்து வருவது போல்
உணர்ந்தேன்

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...

உன்னை காதலிப்பதாய்
சொல்ல முயன்று
எனக்குள் மென்று
நான் உருகிப் போனேன்

என்று

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை...


நான் சொல்லி இருந்தால்
ஒப்புக் கொண்டிருப்பாயா....


உன் சுவாசம்
என் முகத்தில் படுகிற
தூரத்தில்

ஒருமுறை வருவாயா....

அந்த ஸ்பரிசத்தை
நெஞ்சில் புதைத்துக் கொண்ட பின்....


நீ என் காதலை ஏற்றாலும் சரி...

இல்லை என்றாலும் சரி....