Dec 22, 2010

மடியோடு மட்டும்

கருவோடு நீ தரித்த
அந்த கணமே
நீ அவளுக்கு அகிலமானாய்....

அம்மா என்று நீ
அவளை அழைக்கப் பிறந்தாய்

நீ அழைத்து முடிக்கும் முன்
உன்னை அள்ளி எடுக்க அவள்
துடித்துக் கிடந்தாள்....

அவளே
அத்தனைக்கும் முதல் எழுத்து...

இந்த அகிலம் வளர
தலையெழுத்து!!!

நிலா சோறு நீ தின்ன
நட்சத்திரம் பறித்திடுவாள்...

நாற்காலியை பிடித்து
நயமாய் நீ நடக்கும் போது
அவள் கூட உன் நடையை
தன்னையறியாமல் பழகிடுவாள்...

நீ தரும் முத்தம்
சுகமாய் போனாலும்
நீ விட்டுவைக்கும் எச்சில் தான்
அவள் அறிந்திருந்த அமுதம்!

நீ பசி தாங்க மாட்டாய....
அதை அறிந்தவள்
உன் பசி ஆற்ற உதிரம் தந்தாள்..

நீ எழுதிடும் அகரங்கள்
தவறே ஆனாலும்
ரசித்திடும் முதல் ஆசிரியை...

நகம் வெட்ட
உன் விரலை பிடித்தாலும்
உனக்கு வலிக்காது வெட்ட
அவள் படும் பாடு...

நீ அறிந்திருக்க மாட்டாய்...

உலகத்தை ஆளுகிற பொய்களுக்கிடையில்
ஒரு உண்மை இருக்குமானால்...

அது தான் அம்மா..

நீ அழுதிடும் போது
உன் கண்ணீரை ஆற்ற
அவள் விரலோடு இதயமும் நீளும்...

மருந்தே இல்லாத
நோய் 
அது கூட அன்னை
மடியோடு மட்டும் ஆறும்!

அதில் காதலும் அடங்கும்!

எத்தனை தான்
சண்டையிட்டாலும்
சுவாசத்தை அடுத்து
உன் நெஞ்சுக்குள் நிரம்பி கிடக்கும்
அம்மாவின் ஞாபகம்..

உன்னையே கொஞ்சிக் கிடப்பாள்
நீ கொஞ்சினால் மிஞ்சி நடப்பாள்

கோபப்பட்டால்
கெஞ்சி கிடப்பாள்...

அவள் மட்டும் தானே 
நீ எப்படி இருந்தாலும்
அன்பு செய்பவள்...

நீ வளர
அவள் தேய்ந்து போவாள்...

அவளறிந்த மொழிகளில்
அன்பு தான்
தலை மொழி..

உன்னை கையில் ஏந்தி
தாலாட்டினாள்

அவள் முந்தானை பிடித்து
நீ உலகை வளம் வர...
ஓராயிரம் யானை பலம் உன் தோளோடு பிறந்த காலத்தை
மறவாது

அவள்
முதிரும் போது
சீராட்டு...

அதுவே..
அவள் உனக்கு உயிர் தந்ததற்கு
நீ செய்யும் பாராட்டு...

Dec 15, 2010

போன தொலைவு நினைவில் இல்லை

சுட்டெரிக்கும்  வெயில்
நிலா வெளிச்சமாக....

வெட்டவெளி பாதை
ஒன்று மலர்க்காடாய் போக...

உன்னை உயிருக்குள் பூசி
நடந்தேன்....

போன தொலைவு நினைவில் இல்லை....

உன நிழல் விழுந்த மண்ணைத்
தொட்டுப்பார்த்து
அது கனவில்லை என உறுதி கொண்டேன்.. 

உனக்கும் எனக்கும்
இருந்த இடைவெளியை
குறைக்கப் பார்த்து
நான் அருகில் வரும் போதெல்லாம்..

தள்ளி நடந்தாய்..

தளிரே...
உன் சுவாசமேனும் படுகிற
தூரத்தில்
நான் இருக்கக் கூடாதா
இதயம் யாசித்தது...

நீ விரித்திருந்த மௌனப் போர்வையை
விலக்கத் துடித்து
இறந்து போன
என் வார்த்தைகளை

அள்ள முயற்சித்து
தோற்றுப்போன என்னை
காற்று கூட திட்டியது

அறிவாயா?

உனக்காக தூக்கம் தொலைததுவும்...
உருகிக்கிடப்பதுவும்

சொல்லத் துடித்தே
சில தூரம் நடந்துவிட்டேன்...

கவிதை வார்த்துக் கிடப்பதுவும்
காதல் என்னை தின்பதுவும்

எப்படிச் சொல்ல
தயங்கியே அமைதி கொண்டேன்....

இத்தனை காலமும்
என் தோட்டம் முழுதும்
நீயே பூத்துக்குளுங்கினாய்...

உனக்கு எப்படி நன்றி சொல்ல...
யோசித்து யோசித்து

என் கால்களுக்கடியில்
வியர்வைக்கடல்...

உன்னை இதயத்தின் மையக்கூட்டில் உட்காரவைத்த
நாளிலிருந்து
நீ ஆளுகிற இந்த உடலையும் உயிரையும்

உன் உள்ளங்கையில் திணித்துவிட
ஆசைப்பட்டு நடந்தேன்...

ஒரு மணி நேரம் கடந்திருந்தது!

உன்னோடு இருக்கும் போதெல்லாம்
காலம் கால்களில் சர்க்கரம் கட்டிக்கொண்டு ஓடுகிறதே

என்ன செய்வேன்?

நீ வரமாய் வரப்போவதாய்
நம்பிக்கை கொண்டிருக்கும்
என் வீட்டு செடிகளிடம்

இன்று நிச்சயம் காதலை சொல்லுவதாய்
சத்தியம் செய்து வந்தேன்...

அதற்காகவாது....

நமக்குள் மூண்டு கிடந்த
மௌனத்தை
நிறுத்தியாக வேண்டுமென்று
லட்சியம் கொண்டேன்...

நான் வெல்ல துடித்த மௌனம்
என்னை கொன்று குவித்த நேரம்..

நீ புன்னகையால்
புதிர் தடவினாய்...

நீ போகும் வரை
என்னை பேச விடாத
எதோ ஒன்று
நீ போன பின்
சத்தமாய் உன்னை கூப்பிட சொல்லியது!

மழை
வந்த தடமின்றி
நின்றுவிட்டாலும்
அது விட்டுச்சென்ற ஈரம்
வேர்களில் தங்கியது போல்
உன் வாசம் மட்டும் என் சட்டை நுனியோடு
மிச்சமிருந்தது!

சொல்லவந்த எதுவுமே...
சொல்லப்படாமல் முடிந்து போன

இது போன்ற சந்திப்புகளில்

போகிற தொலைவு நினைவில் நிற்ப்பதில்லை....

Dec 13, 2010

மழைமகள்

செல்லத் தாரகையே...
என்ன தான் வரையப் போகிறாய்..
உன் நீர் தூரிகையால்...??

இன்று உன் தூரலில் நனையவே..
உடலோடு உயிர்
ஒட்டிக் கொண்டது போல்
ஒரு அழகான உணர்வு தந்தாய்...

நீ வரின்..
வானத்தில் போடுகிற
கார்மேகக் கோலம்
காணக் காண அழகு!

எந்தக் குளத்திலிருந்து
நீரள்ளி வருகிறாய்
இத்தனை தெளிவாய்...

நீ வந்து போடும்
உறவு பாலம்
வானையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை....

எங்கள் வாழ்வையும் தழைக்கச் செய்கிறது!

இன்று பிறந்த குழந்தை போல்
சிணுங்கிக் கொண்டே நீ
தூறும் போது

யாருக்குத் தான் ஆசை வராது...
உன்னை தொட்டுப் பார்க்க... ???

என்னிடம் யாருந்தன்
காதலி என்று கேட்டால்...
மழை தான் என் முதல் காதலி என்பேன்..

ஏன் எனில்
நீ மட்டும் தான்
என்னை முதல் முறை
முத்தமிட்டாய்...

உச்சி முதல் பாதம் வரை!!!

நீ இடுகிற முத்தத்தில்
நான் பலமுறை காய்ச்சல் கண்டேன்...

இருந்தும்
இதுவரை ஒருமுறை கூட
உன்னை திட்டியாதே இல்லை நான்...

என் உயிர் தோழியை 
தொடுகிற
உரிமையை
உனக்கு மட்டும் தந்தேன்...

அவள் துப்பட்டா நுனி தாண்டி
வழிகிற உன்னை கையில் ஏந்திய போது
ஆண்டுக்கணக்காய் தண்ணீரை காணாது கண்ட நிம்மதி!

நீ பாரபட்சமின்றி சிந்தும் போது
உனக்குள் அப்படியே கலந்து போகத் தோன்றும்...

உன்னால் தெருவெல்லாம்
சேறு பட்டாலும்
உன் தடவுதலில் தானே...

பூமி சுகம் கொள்கிறது!

எத்தனை வேகத்தடை இருந்தும்
சீறிப் பாய்கிற எந்த வாகனமும்
உன் பொழிதலில்
கொஞ்சம் நிதானம் காட்டும்...

நீ ஒரு செல்லத் தாரகை...
சொட்டச்சொட்ட பேசுவாய்...

நீ குட்டினால்...
யாருக்கும் வலிக்காது..!!

மழைக்கே உரிய மனசை
புரிந்து கொண்ட செடிகளெல்லாம்
நீ வரும் போது
முகம் உயர்த்திக் காத்திருக்கும்
குளியல் போட!

மழைக்கரமே....

நீ எங்கள் தலைத் தொட..

புனிதமாகும்
எங்கள் பூமிக்காடு

உன்னில் கலந்தால்

கொஞ்சம் தணிந்து போகும்
எங்கள் கவலைச்சூடு!!!

Dec 9, 2010

கருவில் அழிந்த கவிதைகளுக்கு...

கருவில் அழிந்த சில
கவிதைகளுக்காக...

இதோ அழுகிறது
இன்னுமொரு கவிதை...!

கையில்
பேனாவும் காகிதமும்
இல்லாத நேரம்..

என் மனதுக்குள் தளும்பி இறந்த
அந்த கவிதைகள் யாவும்
மீண்டும் வர சாத்தியமா...
முயன்று தோற்கிறது
என் கற்பனைக்கருவரை!

தூக்கம் தவிர்த்து
ஏதேனும் எழுதப் பார்த்தால்
எதுவுமே தோன்றாது பல நேரம்...

கண் மூடி படுக்கையில்...
பல நாளாய் காணாது வந்த காதலி போல்
தொல்லை செய்யும்...
அந்த முரட்டுக் கவிதைகள்...

காலையில் எழுதித் தொலைக்கலாம் என..
காகிதம் எடுத்தால்...
வரமாட்டேன் என்று அடம் பிடித்து
செத்துப் போன

அந்த
நல்ல கவிதைகளை....
எப்படி மீட்பது..?

சாலையில் நடக்கும் போது
பட்டென்று பிறக்கும்
கவிதைகளை
கையில் அள்ள நினைக்கும் போது

பட்டுப் பூச்சியாய்..
பறந்தொழிந்த போன
கவிதைகளை எப்படி மறப்பது??


இன்னும்
பலவாறாய்...

நான் பறிகொடுத்த
கவிதைகளுக்காய்...

இதோ கண்ணீர் வடிக்கிறது
இந்த கவிதை!!!!

Dec 8, 2010

நினைவில் நின்ற சிநேகிதிக்கு

"அ ஆ இ ஈ" என கரிப்பலகையில் எழுதிய போதே
என் அருகிலிருந்தாயாடி நீ...
அதனால்
அரும்பாய் இருந்தபோதே
பயிரிடப்பட்டதல்லவா
இந்த கவிதைக்கான விதை...

நிலாவை மறைக்கிற மேகமாய்
முட்டி வரை விரிந்த
சீருடையில்
தோளுக்குக் கீழ்
கைக்குட்டையும் குத்திக் கொண்டு
உன் தந்தையின்
கைப்பிடித்து  வருவாய்...

நீ வந்தவுடன் தான்
என் அன்றைய நாளே தொடங்கும்...

உன் வீட்டுக்குள் நடந்த
எல்லாமே எனக்கும்...
என் வீட்டுக்குள் நடந்த
எல்லாமே  உனக்கும்.....

தெரிந்திருந்தது !!!

நட்புக்கு அர்த்தம் தெரியாத
வயதில் கூட...
உன் மீது நானும்
என் மீது நீயும்
கொண்டிருந்தோமே...

அந்த உணர்வுக்கு பெயர் என்ன... ?

இந்த பூமியோடு
வானமும் காற்றும் நீரும் நெருப்பும்
கொண்டது
என்ன உறவோ....

அது தான் நம்முள்ளும்
இருந்திருக்க வேண்டும்...

எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத
ஒரு உன்னத அன்பு...

உனக்குப் பிறகு யாரும் காட்டாதது!!!

நீ நிலாவை பார்த்து
சோறு உண்ட நாள் தொட்டு
உன்னை எனக்கு தெரியும்...

இன்று எந்த திசையில் இருக்கிறாய்
சிநேகிதி?

உன் பெயர் பதித்த
எதை பார்த்தாலும்
உடனே என் ஞாபகக்குமிழில்
வந்து உட்காரும் உன்னை..
தேடிப் பார்கிறேன்...!!!

உன் அருகிலேயே இருந்தேன்
அன்றெல்லாம் சத்தியமாய் தெரியாது
இப்படி ஒரு பிரிவு வந்து

என் கண்களில் இருந்து உன்னை
அருத்தெடுக்குமென்று...

உனக்கெப்படித் தெரியும்
உன்னை நான் நினைப்பது?
மழையாய் வந்து
என்னை தொடப் பார்க்கிறாய்...

ஒருவேளை நீயும் அழுகிறாயோ..??

என் ஜன்னல் ஈரமாகும்
உன் சாரல் பட்டு...
அப்போது
கொஞ்சம் என் காகிதங்களும்
உன் தொடுதலில் நனையட்டும்....

உன்னைப் பார்க்க காத்திருக்கும்
நானும் என் கவிதைகளும்
உன் வார்ப்புகளுக்கு
என்றும் அடிமை..

தோழியாய் வந்தவள் நீ
என் தோளில் கைப்போட்டு
நடக்கையில்....
எனக்குள் ஒரு அபார சக்தி
இருப்பதை உணர்ந்தேன்....

இன்று உன்னைப் பிடுங்கிச்சென்ற
விதியை  எண்ணி சோர்கிறேன்...

இத்தனை பெரிய உலகில்
உன்னை மட்டுமே..
என் இதயத்திற்கு பக்கத்தில் வைத்தேன்

என் அம்மாவுக்குப் பிறகு
நீ தான் ஒருநாள் உணவூட்டினாய்...
உன் பிஞ்சுக்கையால் நீ அள்ளிய பருக்கைகளில்
பாதி மட்டுமே உன் வாய் வரை வந்தது...

பதினாறு வயது வரை...
என் வீட்டையும் மனசையும்
அலங்கரித்த உன்னை...

நான் தேடாத திசை இல்லை...

இன்றும் மல்லிகையைப் பார்த்தால்
இது அவளுக்குப் பிடித்த பூ
என்று நினைப்பதுண்டு....

உனக்கு பிடித்த எல்லாமே
என் அருகில் இருந்து கொண்டு
உனது இல்லாமையை அதிகப்படுத்தினால்....

என்ன செய்வேன்..?

காலம் உன்னை தூக்கிச்சென்ற
தொலைவு
நான் அறியேன் தோழி...

நீ எங்கிருந்தாலும்
இந்த கவிதை உன்னால் வாசிக்கப் படுவதற்காக
காத்திருக்கிறது!!!

என்னைப் போலவே!

Dec 5, 2010

ரெட்டை ஜடை ரோஜாப் பூவே...

இத்தனை நாட்களுக்குப் பிறகும்....

உன் வாசனை திரவியம்
என் நாசி தொட..

அது நீ தானோ என்று
திரும்பிப் பார்கிறேன்...
பத்து வயதில் வந்த காதல்
இன்னும் என் இதயத்தில்
இறுகிக் கிடப்பது
கசப்பான உண்மையடி!

பள்ளி வயதில்
என் மனதில் வளம் வந்த
ரெட்டை ஜடை ரோஜாப் பூவே...
நீ நலமா..?

உன் திமிர் நிறைந்த முகமும்..
தென்றல் பேச்சும்..
வருடங்கள் கழித்து வந்திறங்கிய மழை போல்
குளிரூட்டிய சிரிப்பும்...

இன்னும் ஞாபகமிருக்கிறது... !

உனக்கு  என்னை ஞாபகமிருக்கிறதா....???

உன்னைப் பார்க்கவே பள்ளிக்கூடம்
வந்த நாட்களை
நான் எப்படி மறப்பது???

என் நோட்டுப் புத்தகத்தில்
மயிலிறகு வைத்திருதேன்..
அது குட்டி போட்டதோ இல்லையோ...

ஒருநாள்
அதை உன் புத்தகத்தில் வைத்துக் கொள்ள
ஆசைப்பட்டாய்...

அன்று
உன் மீது எனக்கு காதல் பூத்தது...

உன்னை அறியாமல்
என் தோளில் கை போட்டு
நடந்தாய்..
என் மனசு
பறக்கத் துடிக்கிற பட்டமாய்
தளும்பியது!

உனக்கு கொடுப்பதற்காகவே
தினமும் மல்லிகைப் பூக்களை
பையில் கட்டி வருவேன்...
வாங்கிக் கொண்டு புன்னகைப்பாய்...
அன்று நீ செய்த புன்னகைக்கு என்ன அர்த்தம்???

என்னை ஆசிரியை
அடித்த போது
உன் விழியோரம் வெண்ணீர் பூத்திருந்ததே...

என்னைப் உனக்குப் பிடித்திருந்ததா?

தெரியும்..
பத்து வயதில் வருவதெல்லாம்
காதலாகாது..
இருந்தாலும்...

உயிரழித்து மோசம் செய்யும்
புயல்
விட்டுச்செல்கிற தாக்கத்தை
தரும்...
ம்ம்ம்...

தந்தது!!!

நானும் நீயும்
பார்த்துக் கொண்டோம்...
அடிக்கடி சிரித்துக் கொண்டோம்...
அத்தனை பேர் இருந்த போதும்

என் நினைவுக்கூட்டில் ஒட்டி இருப்பது
உன் முகம் மட்டும் தான்...

பதிமூன்று வருடங்கள்
கடந்தாலும்
என் மனதுக்குள் முதல் முறை
காதல் விதைத்த உன்னை
எண்ணாமல் இருப்பது என்ன நியாயம்???

உனக்கு மணமாகியிருக்கலாம்
பழகித் திறந்த பள்ளிக் காலத்தை
நீ மறந்துமிருக்கலாம்....


நான் கொண்ட முதல் காதலே..

உன்னை மறவாத நான்
இன்னும் உயிரோடு
இருப்பதற்கு

இது ஒரு பதிவு!!!