Sep 20, 2011

வேடிக்கை மனிதர் கூட்டம்

யாரென்று தெரியாத போதும்
ஓரிரண்டு ரூபாய் தானம் செய்வோம்...
தர்மம் செய்ததாய்
விளம்பரம் செய்வோம்....

ஒருவேளை உணவின்றி
உளரும் சிலர் வறுமை நிலையை
கண்டும் காணாமலும்
ஏளனம் செய்வோம்....

தாய் தந்தை இல்லா
குழந்தைகள் கண்டால்
குற்றம் சொல்வோம்....

அவர் அன்னை தந்தையை
குதர்க்கம் செய்வோம்.....

நோயுண்டு சாலையில்
நொறுங்கி வாடும்
மனிதரை கண்டால்
ஒதுங்கி ஓடுவோம்....

மேடை பல ஏறி
வறுமை ஒழிக என
சொற்பொழிவாற்றுவோம்.....

சிந்தைக்குள் அதை நிறுத்த
தவறி
அற்பமாய் உலாவுவோம்....

உழுது உயிர் விதைக்கும்
விவசாயி
எலிக்கறி தின்று இறப்பதை கண்டும்
அவனது சமாதியில் அடுக்கடுக்காய்
கட்டிடங்கள் கட்டுவோம்....

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல்
ஜகத்தினை அழித்திட
நினைத்தான் ஒருவன்

நாமோ....

நமக்கு உணவில்லையெனில்....
ஒரு ஜகத்தையே அழித்திடுவோம்....

நாமெல்லாம்

நயவஞ்சகத்தில் நசுங்கி
சுயநலத்தில் ஒடுங்கி

புன்னகை சாயம் பூசி
ஆடம்பரமாய்...
ஆடித் திரியும்....

வேடிக்கை மனிதர் கூட்டம்...

எது பெரிது???

நட்பினும் பெரிது காதலா
இல்லை
காதலை காட்டிலும் பெரிது நட்பா
இளமை தரும்
கவிதைகள் தரும்
கலர் கலராய் கனவுகள் தரும்
காதல்....
தோற்ப்பின் தோள்கள் தரும்
அன்பை அளவின்றி தரும்
உலகை சுற்ற பலம் தரும்
நட்பு
யாருக்கும் பயப்படாது காதல்...
யாரானாலும் அணைத்து ஆட்பரிக்கும் நட்பு...
உடல் போயினும் உயிர் நீங்கினும்
அகலாது காதல்
கண்கள் கொள்ளாது கண்ணீர் வரின்
துடைக்காது போகாது நட்பு....
வாழ்க்கை பசிக்கு
காதல் உணவானால் .....
நட்பு நீராகும்....
காதல் கடலானால்
நட்பு கரையாகும்....
காதல் வானமானால்
நட்பு கூரையாகும்....
இதில்
எதை வேண்டுமென்பது
எதை வேண்டாம் என்பது?????
காதலோடு நட்பும்
நட்போடு காதலும்
இணைந்தே உலக பந்தை
சுழற்றுமானால்.... 
காதலில் மூழ்கி 
நட்பில் எழுவதை விட 
வேறென்ன வழி??? 

Sep 17, 2011

கால ஓட்டத்தில் கவியானேன்

இதயத்தில் வியாபித்து 
உதிரத்தில் ஒட்டிவிட்ட
ஓரிரண்டு முத்தங்களும் 

அநியாயமாய் வெட்கப்பட்டு 
அதற்குப்பின் நீ உதிர்த்த 
வாக்கியங்களும் 

போதும் போதும் 
என்ற போதும் 
"இன்னும் இன்னும்" என்று நீ ஊட்டிய
உன் பாசமும் 

உயிர் கொடுத்து உயிர் வாங்கிய 
தொடுதலும் 
தொடுதலை மீற முயற்சித்து 
தோற்ற நம் ஆர்வமும்....

களைப்பறியாது நடந்த சாலைகளும் 
சாலையோரம் நின்று நம்மை
வெறித்து பார்த்த 
பார்த்தீனியச் செடிகளும் 

மிட்டாய் தின்கிற சாக்கில் 
சப்புக் கொட்டி 

நீ என் பஞ்சு மிட்டாய் 
என்று ஒழுகிய காலங்களும் 

தேர் வீதியில் சந்திப்பதாய் சொல்லி 
வராமலே ஏமாற்றிய குறும்புகளும் 
அதில் மிச்சமான அழுகைகளும் 

கவிதை ஒன்று கிறுக்கி விட்டு 
அதை சொல்லும் போது  
உன் கை வளையல்களில் 
நான் வளைந்த மாலைகளும் 

மடிந்தாலும் மறக்காத 
ஞாபகத் தீர்த்தங்கள்... 

என் நடமாடும் கவிதையே 

உன்னால் அடைந்ததும் 
தொலைத்ததும் ஞாபகத்தில் இல்லை 

ஒன்று மட்டும் உண்டு 

நீ வந்து போனதில்  
காதல் கொண்டு பித்தனாகி

உன் கன்னக் குழியோரம் 
ஒரு துளி வியர்வையாக ஆசைப்பட்டு.... 

பின்

கால ஓட்டத்தில் 
கவியானேன்.....

வாழ்த்துரை

உள்ளிருந்து உன் நினைவுகள் 
துவம்சம் செய்த போதும் 
வருகிறேன் என்று வாக்களித்தேன் 

தோளோடு தலை சேர்த்து 
விரலோடு விரல் கோர்த்து 
கதை பேசிய காலமெல்லாம் 

தோழி நீ இல்லாத பொது 
என் தோலுரித்தது! 

சிறுகச்சிறுக சேமித்த காசெல்லாம் 
உண்டியலோடு காணாமல் போனால் 
சேமித்த சிறுவன் எப்படி அழுவான்.... 

அப்படித்தான் அழுதேன் நானும்.... 

கண்களில் கூடு கட்டி 
காத்திருந்த கனவுகள் எல்லாம் 
உடைந்ததில் 

கூர் வாள் கொண்டு
கிழித்த குடமாய் 
ஏக்கங்கள் ஏந்தி
துளிர்த்தன நீர்ப்பூக்கள்....

உன் மணநாளை நீ அறிவித்த
அந்நாளே
உயிர் உரிந்த பிணமாய்

இதழோடு இறுகி வர மறுத்த
புன்னகையை
வலுக்கட்டாயமாய் இழுத்து வந்து
"வருகிறேன்" என்று வாக்களித்தேன்....

நீ இன்று வரை அறிந்திடாத
என் காதலுக்கு முடிவுரை எழுதி

உனக்காக எழுதப் போகிறேன்
வாழ்த்துரை....
Sep 10, 2011

ரசிப்பு

அன்று நீ அறிந்திராத பொழுதில்.. 
உன் வீடு புகுந்தேன்... 

அப்போது

உன்னை ரசித்துக் கொண்டிருந்தன 
உன் வரவேற்ப்பரையில்
நின்றிருந்த பொம்மைகள் எல்லாம்.... 


சொல்லாயோ உந்தன் சோகம்

அழகான பேச்சுக்காரி 
மல்லிப்பூ மனசுக்காரி 
நிலவரும்பா நீ சிரிக்க 
மறந்ததடி உலகம்....

மருதாணி சிவப்புக்காரி 
மனச அல்லும் திருட்டுக்காரி
நதிபோல நீ பொழிய 
இனிக்குமடி மரணம்... 

சொட்டசொட்ட பொழிந்து விட்டு 
கிட்டத்தட்ட நின்ற பின்னும் 
மனசுக்குள்ள 
பொழிந்து கொட்டும் மழையடி.... 

வேண்டாமென்று மறுத்தாலும் 
கூடாதென்று நினைத்தாலும் 
திரும்பி பார்க்கச்சொல்லி அழும்
மழலையடி... 

உன் சோகம் எதுவானாலும்  
என் தோள்கள் அதை சுமக்கும் 
உன் பாதம் போகும் தூரம் 
என் பார்வை நிறைந்திருக்கும்....

நீ வந்து பழகிய காலம் 
என் வாழ்க்கையின் மழை காலம் 
எதை மறந்தாலும் 
மறக்காத காதல் காலம்... 

நீ வருவாயென்று தெரியாதே
உன்னோடு தொடரும் எந்தன் பயணமென்று தெரியாதே
உனக்காக உயிர் கொள்வேன் என்று கூட தெரியாதே
என்னை பிரிந்து நீ போனால்
நெஞ்சமதை தாங்காதே...

சுற்றும் பூமி எப்போதும்
யாருக்காக என்றாலும்
சுற்றுவதை நிறுத்தாதே
சோகமெல்லாம் ஒரு நாளில்
சாயம் போகும் வருந்தாதே 

உனக்காக எப்போதும்
நான் இருப்பேன் இது நிஜம்
கண்ணின் மணி நீ அதனால்
சொல்லாயோ உந்தன் சோகம்...
மழையை போல மனசு உனக்கு

மழையை போல மனசு உனக்கு
உலகம் சொக்கும் அழகிருக்கு 
தேனப் போல குரலிருக்கு 
நிலவு போல நிறமிருக்கு.... 

இறுகிப் போன என் மனச 
இளகிப் போக வச்சவளே
எந்த தேசம் கடந்து வந்த 
இந்த மனச ஜெய்க்க வந்த... 

நீ முத்துமுத்த பேச
மொத்தமும் மறந்து போகாதோ 
உன் முகம் பார்த்த கணமே.. 
மரண வலியும் பறந்து போகாதோ... 

வானத்தில் ஜன்னல் வச்சு 
வட்ட நிலா உன்ன பாக்குதடி 
உன் கண்ணுக்குள்ள என்ன  சோகம் 
எட்டி எட்டி பாக்குதடி... 

யாரு மீது கோபமடி..
யாருக்காக மௌனமடி 
யார் பேச்சு காயோ நீ... 
சொல்லு சொல்லு கண்மணி... 

தென்றலடிச்சா சிரிக்கும் 
புயலடிச்ச இறக்கும் 
பூப்போல இருக்காதே... 
பூமி மீது எப்போதும் 
தென்றல் மட்டும் அடிக்காதே..... 

சுவற்றில் ஏறி 
வலை பின்னும் சிலந்தி எப்போதும் 
சுவற்றுக்கு பாரமில்லை.... 
சொல்லவா உண்மை கண்ணே 
நீ எனக்கு யாரோ இல்லை... 

விழியோடு சோகம் கொண்டால் 
வழியோடு வலிகள் சேரும்... 
உள்ளத்தை உடைக்கும் ஏக்கம் 
எல்லாமே சீக்கிரம் போகும்....  


வாழ்ந்திட சொல்லி வாழ்க்கை அழைக்கிது
ஆயுளை நீட்டும் அதிசயம் அதுவோ 
சிரிப்புக்குள் இருக்குது 
சிரித்திடு சிரித்திடு..... 

மழையை போல மனசு உனக்கு
உலகம் சொக்கும் அழகிருக்கு 
தேனப் போல குரலிருக்கு 
நிலவு போல நிறமிருக்கு.... 

இறுகிப் போன என் மனச 
இளகிப் போக வச்சவளே
எந்த தேசம் கடந்து வந்த 
இந்த மனச ஜெய்க்க வந்த... 


இம்சை

உன் நிழல் படக் 
காத்திருந்து 
கவிதை செய்வதும் 

நீ சிரிக்கும் போது
உன் இதழ்களை பாராட்டி 
முத்தமிடுவதும் 

தூக்கம் தொலைத்து 
எழுகையில் 
உன் மூச்சுக்  காற்றில் 
நனைவதும் 

மனசெல்லாம் நீயிருக்க 
மழை காற்றில் சிக்கிய பட்டமாய் 
பறப்பதுவும்

ஊடல் கொள்கிற பொழுதில்
தோளில் சாய்ந்து அழுவாய் 
அதில் கரைந்து சர்க்கரையாவதும் 

நீ இம்சை என்று தெரிந்தும் 
இன்னும் இன்னும்
ஏக்கம் கொள்வதும்

பிடிக்கிறது... 

எனது நேற்றையும் இன்றையும்
நிரப்பிய தேவதையே....

உன் கை பிடித்து போனால்
தூரமெல்லாம் பக்கமாகும்...

என் இதயத்தில் ஒட்டிக் கொண்ட  
உன் நகப்பூச்சின் வண்ணமெல்லாம்
காயவும் மறுக்கிறது....
அழியவும் மறுக்கிறது

போதும் போதும்
என்றாலும்

பொழிந்து கொட்டும் காதலே

உன்னால் உனக்காக
உயிர் கொள்கிறேன்...

உன் மௌனங்கள் முடிகிற
நொடிகளுக்காக காத்திருப்பேன்
சந்தோஷமாய்...

அந்த மௌனங்களின் முடிவில்
எனக்காக சில வார்த்தைகள்
பிறப்பெடுக்குமே
அதற்காக....