May 15, 2011

என் காதலின் எச்சங்கள்

உன் விழி தாண்டி
வழிந்து போன
துளிகளுக்கு என்ன தெரியும்

உன் கன்னம் கடந்தவை எல்லாம்
வெறும் கண்ணீர் அல்ல..
என் காதலின் எச்சங்கள்.....

கண்களின் விளிம்பில்
நீ தேக்கிய சோகமென்ன
என் வாழ்கையின் அர்த்தமே....

விழி நீரை விலக்கியபடி
நீ கலங்க
உன் உள்ளங்கையில் ஒட்டி இருக்கும்
என் சந்தோஷங்கள் 
கலைந்து போகிற 

இந்த நொடியில் 

உன் கன்னம் துடைக்க
ஓடி வந்த 
என் விரல்களின் இடுக்கில்

முளைத்து கொண்ட இதயத்தை 
என்ன சொல்லி ஆற்றுவேன்?? 

நீ துடித்தழுத கனத்தில்
துண்டுதுண்டாய் போனேன் 

மீண்டும் உன் கண்களில் 
கண்ணீராய் உருண்டு போனேன்.... 

நீ என்பது மட்டும் 
என் உலகத்தின் பொருளான போது.... 
நீயே உடைந்தழுவாயெனில்
என் உலகமல்லவா உடைந்து போகும்???

நீ விம்மி அழுகையில் 
குழந்தையானாய் 
உன்னை கொஞ்சுகின்ற அவசரத்தில்.... 

மோகம் துறந்த
தாய்மையை உணர்ந்தேன் நான்.....

சுவாசத்தில் நிறைந்தவளே....
உன்னை தாக்குகிற எந்த சோகமும் 
என் காதலோடு  மோதும் போது
தோற்றுப் போகும்

சிரித்திடு

உன்  கண்ணீரின் இடுக்கில்
நசுங்கிச் சாவதில்
ஆர்வமில்லை எனக்கு...

May 8, 2011

நடுநிசி கவிதை

நித்திரை தொலைத்த
நடு இரவில்.....

கவிதை செய்ய எத்தனித்தேன்...

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எழுதுமாறு கேட்டுக்கொண்ட போதும்....

என் காகிதங்கள் உன் பெயரை மட்டும்
பச்சைக் குத்திக் கொண்டன..

நிலா வானம் நட்சத்திரம்
இத்தனைக்கும் இடையே....
நான் தொட்டு ரசிக்கும் உன்
தேன்முகம் மட்டும்
என் நெற்றிப் பொட்டில் ஒட்டிக் கொண்டது...

நான் வைத்த ஈர முத்தங்களும்
அதற்காக நீ சிந்திய சிவப்பு வெட்கங்களும்

எண்ணியப் பின்
வேறெதையும் எழுதுவது
கண்ணியமாய் படவில்லை...

ஒன்றுமே முடியாதென்று
ஒதுக்கிய என் சுற்றமெல்லாம்
நான் கவியானதை கொண்டாடும் போது

காதலே அது உன்னை
சாத்தியமானதென்று சொல்லாமல் இருக்க முடியாது...

எனக்கு உயிரூட்டியது அன்னை தான்
எனினும்
என்னை உருவாக்கியது நீயே அல்லவே....

உன்னை மென்மையாய் எழுத
எந்த பேனாவாலும் முடியாது...

மயில் தோகையில்
என் உதிரம் நிரப்பி
எழுதவா....

நம்மில் தடமிட்ட
காதலை...

உன் கூந்தல் அசைவுகளில்
நான் சிக்கித் திணறும் போதும்..

மீண்டும் மீண்டும் சிரிப்பாய்....

நான் மீள முடியாது
இறப்பேன்....

பூவே உன்
மௌனங்களும்
மலர்வுகளும்

எனக்குள் ஏக்கம் தந்த
நாட்கள் நகர்ந்தோடி....

என் மடி மீது நீ
சாய்ந்திருக்கும் இத்திருநாள் வரை.....

ஒவ்வொரு நிகழ்வும்...
ஒவ்வொரு கவிதை

ஆதலால்....
என் செவ்வனமே

நீ கவிதையால்  சொல்லித் தீராதவள்.....May 5, 2011

காலங்கள் கடந்து.....

அழகாய் சிரித்தபடி
ஏதேதோ சொன்னபடி...

என்னவெல்லாமோ தமக்குள்ள பேசிக்கொண்டபடி
காரணங்கள் பல கொண்டு சண்டை போட்டபடி....

சமாதானமாய் ஒன்றை ஒன்று பார்த்து சிரித்தபடி....
அவசரமாய் வாகனத்தில் போகிறபடி.....

உயிர் உருகி சில பேர்கள் காதலித்தபடி....
யார்யாரையோ நினைத்து கண் இமைக்காது யோசித்தபடி....

விலங்குகள் தமக்குள் நட்பு ஒப்பந்தம் போட்டபடி....
அன்று பூத்தது போல்
பூக்கள் எல்லாம் பனித்துகள் தாங்கியபடி....

உலகத்தின் அமைதி எல்லாம் கொண்டு வந்து
கொட்டி வைத்ததொரு அழகில்

அத்தனை பொம்மைகளும்
தமக்கான வாழ்கையை வாழ்ந்து கொண்டே இருக்குமா.....

காலங்கள் கடந்து.....
மொழிகள் கடந்து.....

இதயத்துள் ஏக்கம் பூக்கிறது
இனி நானும் அப்படியே
உறைந்து போகலாகாதா என்று!