Jan 25, 2011

எனக்காக வந்த கதை


                                                                                      
அமுதே நீ
அகிலம் தொட்டு
ஆளான கதை அறியவே ஆவலடி..

நீலவான தொட்டில் கட்டி
நிலாவை கையிலிட்டு
தூங்க வைத்தாரோ..

பல கிரகமுடைத்து
உன் கண்களிலே மையுமிட்டாரோ..

மல்லிகை நீ தூங்க
உலகின் மௌனமெல்லாம்
உன் முகத்தில் ஒட்டிக் கொண்டதோ..

கைகளை மடித்து நீ தூங்க
சில நதிகள் வந்து
உன் ரேகைகளில் பதுங்கி நின்றதோ..

இளையவள் நீ சிணுங்கி எழுந்த
நேரமெல்லாம்
உலகம் விடியல் கண்டதோ..

தாரகை நீ சூடிட
ஒரு பூ தேட
கல்லிச்செடியும் மலராய் மாற
ஆசை கொண்டதோ...

சின்ன பாதங்கள் வீசி
நீ நடக்க என் வைரமே உன் கால்களில்
தங்கம் தான் படைத்தாரோ...

வானவில்லை வளைத்து நீ
வளையல் ஆக்கிட
கோபம் கொண்ட மேகமெல்லாம்
அந்தி ஆனதோ...

தேனமுதே தேவதையே
அழகாய் நீ சிரிக்க விழுந்த குழியில்
பிறைநிலா ஒன்று சேர்ந்து கொண்டதோ...

கனிமொழி நீ பேச
காவியங்கள் கைக்கட்டி புன்னகைததோ..

நிலவொளியே என் நிழலே
தேம்பி நீ அழுக
தென்றலும் அன்னை போல உருவம் கொண்டதோ

வெயிலும் வெறும் தரையும்
படாது வளர்ந்தாய்
உன்னை நனைத்திடவே வந்த மழை
உன்னழகில் நனைந்து மண்ணில் கவிழ்ந்ததோ...

வருடங்கள் கடந்ததின்
ஒரு வரமாய்
முழுமதி நீ பருவம் கொண்டாய்
உன்னை பார்த்துப்பார்த்து
கண்ணாடியும் நாணம் கொண்டதா....

என் கன்னித்தமிழ் கூட
சொல்மறந்து நின்றவண்ணம்
கண் சிமிட்டுமெனில்

எங்கு சென்று மொழி அறிந்து
உன்னை நான் சீராட்ட

கண்மணியே என்னவளே..
கண்ணிரண்டில் கலந்தவளே
என் பேனாவின் நரம்புகளில்
பொங்கி வழியும் காதல் கவிதையே...

நீ எனக்காக வந்த கதை....
என் நெஞ்சில் தலை புதைத்து
கூறாயோ... உன் தேன் மொழியால்...?

3 comments: