Feb 28, 2011

கரிசல்பட்டியிலிருந்து அவள் காதலன்..

அழகா தான் இருந்த...
என் அகிலமே நீ தான்னு நெனச்சேன்..

ஒரு வார்த்த பேச
ஓராயிரம் தடவ சிரிச்ச....
உன் மடியில ஒரு பூவா
நான் சரிஞ்சி விழுந்தேன்..


கண் சிமிட்டி சிமிட்டி
நீ பாத்த...
அப்போ எல்லாம் என் மனசில
காதலத் தான் கண்ணே நீ சேர்த்த....

கவிதை ஒன்னு வேணுமுன்னு
நீ கேட்ட..  கேட்டதுமே கையோட எழுதி கொடுத்தேன்...

இந்த பூமியோட
நான் வாழும் ஒவ்வொரு பொழுதும்
உன்னை தான் நெனச்சிருந்தேன்..

உன் மேல
காத்து கூட வேகமா அடிச்சா...
சுவாசிக்க மாட்டேனு
தவமிருந்தேன்....

ராத்திரி நீ கனவுல வர
பகலெல்லாம் காத்து கிடந்தேன்..

மழை வந்தா நீ கரைஞ்சு தான்
போய்டுவயோனு
நான் நனைஞ்சு குடை பிடிச்சேன்...  

சுந்தரி உன் கொலுசு மணி
எந்த முத்தால செஞ்சதுவோ....

முத்து ஒன்னு உதிர்ந்தாக் கூட
என் கருவிழிய கோத்து தாரேன்னு...

கொஞ்ச நெஞ்சமில்ல
கொஞ்சிக் கொஞ்சி
காதலிச்சேன்...

என் மனச திருடி
மாயமா போன உன்ன
இந்த ஊருக்குள்ள காணலையே...

என் நெல்லமுதே 
உன்னை விட்டு அழுது தேயற
மனசு
மழலையாட்டம்
கலங்குதடி...

என்னை நீயும் நெனச்சுப் பாரு
நெனவிருந்தா

கண்ணா மூடி நல்லா கேளு
நாலு திசை சாட்சியா

நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்
உன் கழுத்தோட முடி போட...

எந்த தடை வந்தாலும்
வந்து சேரு
நாம சுத்தித் திரிஞ்ச
கரிசல்பட்டிக்கு...

நாத்து நட போன போது
வெயில் கூட சுடல
உன்னை ஓரக்கண்ணால பாத்துகிட்டே
வேல செஞ்சேன்...
அந்த உச்சி வெயில் கூட
நதி போல தோணிச்சு...


நீ வர பாதைய பாத்து
காத்து கிடக்கேன்
நீ வராம போன....

அந்த இடத்துலேயே
இறந்து கிடப்பேன்

புல்லு கூட முளைக்காது
உன் கூட வழாம
நான் செத்துப் போனா.....







Feb 23, 2011

கலைந்த கனவு

கனவில் வருகிறாய்  என்பதற்காக
உறங்கப் பழகினேன்
கனவில் வந்து
நேரில் வா என்று கூச்சலிட்டாய்..
கண்ணுறக்கம் கலைத்துவிட்டு..



கண்ணாடி இதயம்....

என் இதயம்
கண்ணாடி போன்றது என்றேன்...
நீயோ
உடைத்துப் பார்த்து
ஊர்ஜிதம் செய்தாய்...

Feb 18, 2011

மண்ணில் புதைந்த உணர்வுகள்...

உலகம் உருவான
முதல் நொடியே
காதலென்ற ஒரு வார்த்தை
நிலம் கிழித்து வந்திருக்கும்...

அது பூமி மீது முளைத்து வரும்
ஜீவனுக்கெல்லாம்
கருவறையில் தொடங்கும்
கட்டாயப் பாடம்....

மனதோடு மனம் செய்யும்
ஒரு வித போராட்டம்...

உன் உடலோடு அட்ரினலின்
போடுகிற அட்டகாசம்....

நீ என்னதான் மறுத்தாலும்
முடியாது போகும்..

முன்னூறு முறை
முயன்றும் மறக்காது
உன்னை தொல்லை செய்யும்...

வேண்டுமென்றே நீ சிக்கிக் கொள்ளும்
ஒருவித நரகம்...

எத்தனைதான் பட்டாலும் தணியாத
அநியாய தாகம்...

மௌனமும் பேசும்
மர்மம் செய்யும்...

இரு இழியும் ஒரு பார்வை
பார்க்கிற மனித இயல்பை....
மாற்றி
நீ விரும்புகிற முகமிருக்கும்
பக்கமெல்லாம் உன் ஒரு விழி
ஓடித் திரியும்..

கனவாகவும் வந்து
கண்ணுறக்கம் கலைத்து விட்டு
காற்றாக மறையும்
காதல் சாயம்..

கவியாய் நீ மாறி
எழுதுகிற சொல்லில் எல்லாம்

பரதிபலிக்கும்
மாயம்....

வயிற்றுக்குள் பட்டுப்பூச்சி
கட்டும்..

இதயத்துடிப்புக்குள்
ஒரு பெயர் சேர்க்கும்!

இத்தனையும் செய்துவிட்டு
இன்னும் ஒன்று செய்யும்....

ஆயிரம் பேர் தடுத்தாலும்
எதிர்த்து நின்று சிரிக்கும்

காதல் வந்தால்
பைத்தியம் போல் பேசத் தோன்றும்....

யாரேனும் கண்டுவிட்டால்
அடி மனதில் கண்ணீர் பொங்கும்..

உருகி காதல் செய்யும் தருணம்
சாத்தியமற்ற எல்லாமே
சுலபமாகும்....

சூரிய ஒளியும்
பௌர்ணமி நிறம் பூசிக்கொள்ளும்...

அவசியமில்லா அவஸ்த்தை
என்று உணர்ந்திட
முடியாத சூழலில் தள்ளி
ஏளனமாய் பார்க்கும்
காதல் பிணி....

ஏன் என்றே தெரியாத போதும்
மனித இனம்
மாட்டிக் கொள்ளும்

சூனியம்.....


சுகமாய் தொடர்ந்துவிட்டால்
தொல்லை இல்லை....

சோகமாய் முடியும்
ஒவ்வொரு காதலும்...

மக்கிடாத  ஒரு பொருளாய்
மண்ணோடு திணறிக் கிடக்கும்

மறுஜென்மத்தில் நம்பிக்கை கொண்டு....
மீண்டும் எழ எண்ணிக் கிடக்கும்.....



Feb 2, 2011

அழியாத தழும்புகள்

அன்பே அகிலமே என்
ஆசை வளர்த்துக் கிடந்ததும்
அழகே உன்னைக் காண
தவம் செய்தேன் என்றதுவும்...
மலர் மீது நீ தூங்க
நந்தவனம் நான் வளர்ப்பேன் என்றதுவும்....
சொல்லொன்று நீ பேசி
என் ஆயுள் நீண்டதுவும்...
மௌனமாய் நீ கிடக்க
உன் காது மடல் தொட்டதுவும்...
கவிதை செய்து நான் கிடக்க
காதலி நீ ரசித்ததுவும்....
வார்த்தையால் சொல்ல முடியா
மோகம் பொங்கி வழியும் போது
நகம் கடித்து நகர்ந்ததுவும்....
நானும் நீனும் என்ற பேதம்
மறந்து நாம் மகிழ்ந்ததுவும்...
உனைக் காணாத பொழுதெல்லாம்
நிலவில்லா ஒரு இரவில் சிக்கிக் கொண்ட குழந்தையாய்
சிணுங்கியே செத்ததுவும்....
சகி உன் கூந்தல் நுனியில்
என் உயிரை நான் முடிந்ததுவும்....
உன் சுவாசம் தொடுகிற
அருகாமையை உணராத நாளெல்லாம்
தென்றல் இல்லா ஒரு கிரகம்
எனை சூழ்ந்தது போல் வரண்டதுவும்...
கண்களால் நீ எனை
தின்றுவிடுகிற போது கூட
புன்னகையால் உன் இதழை நான்
மென்று செரித்துத் திரிந்ததுவும்....
நீல வானம் கூரையாக...
கொட்டும் மழை சாரலோடு
உன் கன்னத்தில் ஈர முத்தம் பதித்ததுவும்
கோபப் பட்டு நீ முறைக்க
பொழிந்த மழை சுட்டதுவும்....
எல்லாம்...
என்னுயிரே
எனக்குள்ளே தழும்புகளாய்
தங்கிவிட

எப்படி நான் கண்டு கை கோர்ப்பேன்
இன்னுமொரு முகம்...?
மணந்த ஒருவனுக்காய்
நீ மறந்தாய் உன் என்னை....

ஆற்றாத வலி எல்லாம்
ஆழமாய் கிடந்து தொலைக்க...
துரோகமொன்று செய்யவா...
ஒன்றும் அறியாத
இன்னுமொரு ஜீவனுக்கு????