Nov 27, 2010

இலையின் சுயசரிதை!

இன்றோ
நாளையோ...

விழுந்துவிடக்கூடும் நான்..

உயிர் பிரியும் முன்...
கேட்டுவிடுகிறேன்..
மரமே என் மீது பிழை இருப்பின்
மன்னிப்பாயா..?

பக்கத்துக்கு இலையை
காதலித்து..
அதன் காதோரம் கவி சொன்ன
காலமது நிறைவுபெற
இதோ இத்தருணம்...
எழுதுகிறேன் ஒரு சுயசரிதை...

காற்றுக்கு எப்போதும் தலையாட்டும்
செல்லப்பிள்ளையாய்..
வானத்தின் ஒவ்வொரு
வர்ணஜாலத்தையும் கண்டு பூரித்ததுண்டு...

பறவைகளின் பேச்சுவார்த்தை
எனக்கு புரியும்..
இருந்தும் கேளாதது போல்
சிரித்ததுண்டு!

ஓயாது எப்போதும்
ஒளிச்சேர்க்கை செய்ததுண்டு...

மரமே...
மனதார என்னை
தொட்டனுப்பு..
தவறுகள் செய்திருந்தால்
மன்னித்தனுப்பு..

நான் ரசித்தப் பின்
பூமியும் மழையை ரசிக்கும்....

நான் குடித்த மிச்ச நீர்
என் மேனி வடிந்து
மண் நனைக்கும்...

நான் தான் விஷத்தை சுவாசித்து
உயிர் கொண்ட அற்புத ஜீவன்...

சூரியக் கதிரை
முத்தமிட்டு சிலிர்த்ததுண்டு....
மனிதம் பதுங்க..
நிழலாக்கித் தந்ததுண்டு..

அதிகமாய் அள்ளி கொடுத்து
கொஞ்சமாய் வாங்கிக் கொள்கிற
உன்னதத் தொழில் செய்தேன்...

நான்....
மனித ஜாதியும் அல்ல
மகாத்மாவும் அல்ல...

சாயம் போய்விட்டதால்..
சரிந்துபோகும்  ஒரு
சராசரி உயிர்..

சில சமயங்களில்
புயல் வீசும்
அது எங்கள் உறவுகள் சிலவற்றின்
உயிர் வாங்கும்..

அப்போது கொலைநடுங்கிப் போனதுண்டு..

என் உயிர் அன்று பறிக்கப் படாததில்..
இன்னும் கொஞ்சம் உலக சேவை
செய்ய முடிந்தது!

ஏன் இலையாய் பிறந்தோமென்று
என்னை நானே கேட்டுக் கொண்ட போது...
பதில் கிடைத்தது!

பூவாய் பிறந்திருந்தால்
ஒரு நாள் வாழ்க்கைக்காக..
மகரந்தம் விற்று பிழைக்க வேண்டும்..

கனியாய் பிறந்திருந்தால்..
கிளிகளின் பற்களால்
இறப்பு வந்திருக்கும்...

இன்னுமொரு சந்தோஷம்
இலையாய்ப் பிறந்ததில்...

எங்களிடையே..
ஜாதிகள் இல்லை..

காற்று கொண்டு வருகிறது
மரண ஓலை...

மண்ணோடு போகிறேன்...

கிளையே வருந்தாதே...
மரணமென்பது நியதியல்லவா...

நான் இறந்துபடின் மட்டுமே...
இன்னுமொரு புதிய இலை
பூமிக்கு சேவை செய்ய பிறந்து வரும்...

சருகாகி நான் இறந்தாலும்
பூமிக்கு உரமாகி இறப்பதால்
நிம்மதி கொள்கிறேன்...
கலங்காதே மரமே..

நான் மீண்டும் வரலாம்
புதிய இலையாய்..

உன் மடியோடு விளையாட....!!!

5 comments:

  1. vaalkkai thathuvathai migavum elimaiyaaga solli irukiraai... :)

    ReplyDelete
  2. i ll just say dis s de best one... ovavaru linum super.

    ReplyDelete
  3. ஒரு இலையோடு கூட இத்தனை உணர்ச்சிகளா.... அருமை!

    ReplyDelete
  4. super akka............athithya.

    ReplyDelete