Apr 19, 2011

கோடை மழை

முதலில் தூரிவிட்டு
பின்பு சாரலிட்டு
ரகளை செய்தாய்...

உன் தண்ணீர் பூக்களால்
நனைந்து தலைத்துவட்டிய
என் வீட்டு செடிகள் எல்லாம்

அழகாய் பட்டது
நிஜப் பூக்களில் நீர் புள்ளிகளோடு....

காடுகள் நனைத்து
வீதிகள் நனைத்து
கடையில்
இதயங்கள் நனைக்க வந்துவிட்டாய்....

சாலையை விரிந்து நனைய
ஆசை கொள்கிறது
மனம்...

கொதித்துக் கிடந்த
எங்கள் பூமி மீது
கொட்டித் தீர்த்தாய்.....

மண்ணோடு நீ மோகம் கொள்ள....
விளைச்சலானது
எங்கள் வாழ்வு..

நீ கொண்டு வந்த
நீரையெல்லாம் எங்கள் குலம் வாழ
கொடுத்துவிட்டாய்...

பேதம் பாராது
சிந்தும் அழகில்
மனிதா உன் பேதங்கள் மற என்று
தட்டிக் கொடுத்தாய்....

அமர்க்களம் செய்து திரிந்த
அத்தனை பறவைகளும்
சமர்த்தாய் பதுங்க...

இலைகள் எல்லாம்
தமக்குள் காதல் கொண்டனவே..

சொட்டச்சொட்ட பெய்து விடுகிற
நீயும்

சட்டென்று பேசி சிரித்து வைக்கிற
மழலையும்

ஒன்று...

இரண்டும் இதயத்தை
நனைப்பதால்...

நாங்கள் வாழ்வாங்கு வாழ
நீ வரமாகும் போது 

உன்னை தவிர்க்க வரும்
குடைகள் ஒரு சாபம்...

உன் பாய்ச்சல்களுக்கு
நன்றி சொல்லும் விதமாய்

உன் துளிகளை முத்தாக்கி
மகிழ்கிறது கடல்....

வள்ளுவன் வாக்கு பொய்க்கவில்லை

வானின்றி அமையாது

வா

வந்து பூமியோடு பழகு...



1 comment: