Oct 21, 2010

காதலால் கண்ட பலன்

       
உன்னையும் தொலைத்த
ஒரு உன்னத நிலை

அதற்கு இல்லையென சொல்
புவியினில் விலை..

மழைச்சாரல் போல்

பொழிந்து
மனசுக்குள்
விருட்சம் விதைக்கும்

அது தான்
உயிர்த்திருக்கக்  காரணம்
உனக்கும் எனக்கும்!!!

கனவுகள் எதுவானாலும்
கைத்தொட வைக்கும்

காதல் கால் வைக்காத இடம்
புறம்போக்கு நிலம்!

அவள் மௌனத்தைக் கேட்கவும்
காதுகள் முளைக்கும்..

பார்க்கிற பொருளில் எல்லாம்
பாவை முகம் வந்து
பாவி மனம் வருடும்!

பழகிய சாலை என்றாலும்
இப்போது பூக்கள் பூத்திருக்கும்

நடக்கும் போது
உன் கால்களுக்கடியில்
பூமி வசப்படும்!

அன்று வரை ஏறெடுத்தும்
நீ பார்க்காத குழந்தையை
நெஞ்சம்
வலுக்கட்டாயமாய் தொட்டு தூக்கச்சொல்லும்

அவளை கண்களுக்குள் இறுக்கிக்கொண்டு
குழந்தையை  உச்சி முகர்வாய்..

நீ தூரிகையைத் தொட்டாலே
ஓவியம் ஜனிக்கும்

எது வரைய நினைத்தாலும்
அவளின் வாசனை உன் கைகளை நனைக்கும்

ஒவ்வொரு முறையும்
காதல் நீ படும் அவஸ்தைகளைப் பார்த்து
கண் சிமிட்டும்!

யாரும் பார்க்காத போதும்
அழகாய்த் தெரிய
ஆசைப்படுவாய்!

அப்போது உன் அனுமதியின்றி
காதல் உன் கன்னத்தில்
ஊஞ்சல் போடும்!

வெள்ளை தாள்கள் கண்டால்
உன்னவள் பெயரை
கிறுக்குவாய்

உனது முரட்டுத்தனம்
அவளது ஒரு பார்வையில் முடிந்துவிடும்..

கர்வமெல்லாம்
அவளது அருகாமை கிடைக்க..
மண்டியிடும்!

தளிர் அவள் வாசனை பட்டு
பாறை நீ படிந்து போவாய்..



அவளே அகிலமாவாள்
உன் அன்னை  கூட
அந்நியமாவாள் !

நீயோ புதிதாய்
கண்ணியம் பழகுவாய்..

உங்களுக்குள் என்ன நடந்தாலும்
மூளைக்குள் நிரப்பி
கவிதையாய்
இறக்குவாய்...

எப்படிச் சொன்னாலும்
தீராது...

தோள்களில்
இறகு முளைத்தும்
பறந்திட முடியாத
இந்த நிலையை....!!!

4 comments:

  1. Hi anitha here..its gr8.. fantastic.

    ReplyDelete
  2. hey priyadharshini here.. your college frnd. You are really gr8 Ji. kp in touch. kp writing.. your poems r fantastic

    ReplyDelete
  3. அருமையான கவிதை..



    "அவளே அகிலமாவாள்
    உன் அன்னை கூட
    அந்நியமாவாள் !

    நீயோ புதிதாய்
    கண்ணியம் பழகுவாய்.. "



    இது எனக்கு பிடித்த வரிகள்..

    ReplyDelete