Apr 19, 2011

கோடை மழை

முதலில் தூரிவிட்டு
பின்பு சாரலிட்டு
ரகளை செய்தாய்...

உன் தண்ணீர் பூக்களால்
நனைந்து தலைத்துவட்டிய
என் வீட்டு செடிகள் எல்லாம்

அழகாய் பட்டது
நிஜப் பூக்களில் நீர் புள்ளிகளோடு....

காடுகள் நனைத்து
வீதிகள் நனைத்து
கடையில்
இதயங்கள் நனைக்க வந்துவிட்டாய்....

சாலையை விரிந்து நனைய
ஆசை கொள்கிறது
மனம்...

கொதித்துக் கிடந்த
எங்கள் பூமி மீது
கொட்டித் தீர்த்தாய்.....

மண்ணோடு நீ மோகம் கொள்ள....
விளைச்சலானது
எங்கள் வாழ்வு..

நீ கொண்டு வந்த
நீரையெல்லாம் எங்கள் குலம் வாழ
கொடுத்துவிட்டாய்...

பேதம் பாராது
சிந்தும் அழகில்
மனிதா உன் பேதங்கள் மற என்று
தட்டிக் கொடுத்தாய்....

அமர்க்களம் செய்து திரிந்த
அத்தனை பறவைகளும்
சமர்த்தாய் பதுங்க...

இலைகள் எல்லாம்
தமக்குள் காதல் கொண்டனவே..

சொட்டச்சொட்ட பெய்து விடுகிற
நீயும்

சட்டென்று பேசி சிரித்து வைக்கிற
மழலையும்

ஒன்று...

இரண்டும் இதயத்தை
நனைப்பதால்...

நாங்கள் வாழ்வாங்கு வாழ
நீ வரமாகும் போது 

உன்னை தவிர்க்க வரும்
குடைகள் ஒரு சாபம்...

உன் பாய்ச்சல்களுக்கு
நன்றி சொல்லும் விதமாய்

உன் துளிகளை முத்தாக்கி
மகிழ்கிறது கடல்....

வள்ளுவன் வாக்கு பொய்க்கவில்லை

வானின்றி அமையாது

வா

வந்து பூமியோடு பழகு...



Apr 8, 2011

வருவாயா ஒரு முறை?

என் சூரிய உதயமாய்
நீயே மலர்ந்த போது

என் அதிகாலை பொழுதுகள்
அழகாய் விடிந்தது....

தூக்கம் என்பது
மரணத்தின் ஒத்திகை அல்லவா...

நீ வந்து என் மரணத்தைத் தடுத்தாய்....

உனது நுனிவிரல் தொடுதலில் தானே
துளிர்த்தேன் நான்....

உன் வெளிச்சத்தில் வெட்கப்படும்
தாமரையாய்...

நீ வராத நாட்களில்
இருளுக்குள் இறுகிப் போயின என்
உணர்ச்சிப் பறவைகள்....

உன் உதயங்கள் செய்த 
மாற்றங்களால்

உயிர் வளர்த்த என் பூமி மீது
ஏனடா இந்த அஸ்த்தமனம்?

உன் வெயில் கரங்கள் படாது
வெளுக்கவே இல்லை

உன்னை பிரிந்தழுகும்
என் கண்கள்...!!!

வருவாயா ஒரு முறை..

உனக்காக பூத்த
என் புன்னகைப் பூக்கள் எல்லாம்
வாடிப் போகும் முன்...???



Apr 6, 2011

என் இதயத் துடிப்பை இம்சையாக்கி..

என் இதயத் துடிப்பையும்
இம்சையாக்கியவள் நீ மட்டும் தான்..

உன்னுடன் நெருங்கி நிற்கும் போது
படபடத்துப் போகும் என் இதயத்தின்
சப்தம்...

இம்சையானது..
என்ன காரணம்...

தூக்கம் நழுவிப் போகிற போது....
என்னறையில் காத்தாடி கூட
உன் முகத்தை காட்டும்

என்னை சுற்றி எல்லாமே
உறக்கத்தில் கிடக்க..

என் தொண்டைக்குள் ஊர்ந்து போகிறாய்
என்ன காரணம்...

நிலா சோறு சாப்பிடும் போதும்
என் தட்டில் விழுந்து நிறைந்தாயடி

அம்மாவின் அருகில்
நான் இருக்கும் போது....

காதலை நினைவூட்டி  
களவு செய்கிறாய்
என்ன காரணம்....

அன்று அதிசயமாய்
மழை பெய்து

என் செடிகளை ஈரம் செய்த போது...

அதிலிருந்த பூவெல்லாம்
உன் மருதாணி சிவப்பாய்
மாறிப் போனது என்ன காரணம்...

யாரவது இருக்கும் தருணம்..
முத்தம் கேட்டு அடம் பிடிப்பாய்....

நான் கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்....

தவித்த நேரம்...
என் உமிழ்நீர் கூட
விஷமானது என்ன காரணம்....

உன் அருகில் கிடந்த போதெல்லாம்
என் கடிகாரம் சுயமிழந்து போகாதா என

யோசித்து பார்த்து
கிளம்பும் போது...

கை பிடித்து இழுப்பாய்..

என் அத்தனை செல்லும்
உன் பிடிப்புக்குள் சிக்கியது...

என்ன காரணம்....

ஒற்றை குடையாய் இருந்த என் மீது
மழை துளியாய் வந்திறங்கினாய்

நீ காய்ந்த பின்னும்....
உன்னில் நனைய ஆசை கொள்கிறேன்..

என்ன காரணம்...

மனதுக்குள் ஒலிக்கும் மாய இசையே
உன்னை உருவாக்கி 
மெருகூட்டி 

என் மனசெவிக்குள் ஊற்றியது யாரோ..... 

போதுமென்று  விலகினாலும்

என் ரத்தத்தோடு
உடலெங்கும் ஓடித் திரிகிறாய்.....

என் இதயத் துடிப்பை..

இம்சையாக்கி....!!!